வெள்ளத்தைப் பார்க்கக் கூட வராத அளவுக்கு தூத்துக்குடி எம்.பி அவ்வளவு பிசியா?... திமுக பாய்ச்சல்
தூத்துக்குடி: தூத்துக்குடியே மழை வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் சேதத்தைப் பார்கக் கூட வராமல் தூத்துக்குடி அதிமுக எம்.பி. எங்கே போனார் என்றே தெரியவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மழை வெள்ளம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர், எம்.பி, அதிகாரிகள் உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது
தூத்துக்குடியில் இதுபோன்ற அளவிற்கு இதுவரை மழை பெய்தது இல்லை. கடந்த 2008ம் ஆண்டு கடுமையான மழை பெய்து மாநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த காலத்தில் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தூத்துக்குடியை நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது நான் ஸ்டாலினிடம் மாநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுத்திட பக்கிள்ஓடையை சீரமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பக்கிள் ஓடை
இதனைத்தொடர்ந்து உடனடியாக ரூ.32கோடி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடையானது தடுப்புச்சுவர்களுடன் கடற்கரையில் இருந்து 3ம்மைல் வரை சீரமைக்கப்பட்டு புதியதாக அமைக்கப்பட்டது. பக்கிள் ஓடையை திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து கோரம்பள்ளம் வரை முழுமையாக செயல்படுத்துவதற்குள் எங்களது ஆட்சி மாறிவிட்டது. ஆனால் அதன்பின்பு வந்தவர்கள் இத்திட்டம் திமுகவால் கொண்டுவரப்பட்டது என்பதால் செயல்படுத்த முன்வரவில்லை. இதனால்தான் இன்று 3ம்மைல் மேற்பகுதியிலுள்ள பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமாகும்.

கைவிட்ட அதிமுக ஆட்சி
ஆனால், இந்த பக்கிள் ஓடையை கூட இப்போதுள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகள், கழிவுகள் சேராத வகையில் முறையாக பராமரிக்கவில்லை. இதனால்தான் தற்போது சிலபகுதிகளில் மழைநீர் உட்புகுந்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டுவரை திமுக ஆட்சிக்காலத்தில் தான் தூத்துக்குடி மாநகரில் அதிகளவிலான வளர்ச்சிப்பணிகள் நிறைவேறி நகரம் வளர்ச்சி கண்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுவரை மாநகரில் எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படவே இல்லை என்பதை இப்போது மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

யாரையுமே காணோம்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதில் கூட அமைச்சர், மேயர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சரியான அணுகுமுறை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கூட எங்களை கண்டால் பதில் ஏதும் சொல்லவேண்டுமே என தயங்கி ஓடி ஒளிகின்றனர். இப்பேர்பட்ட சூழலிலும் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பக்கிள் ஓடை சீரமைப்பு திட்டத்தால் தான் மாநகர மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

சென்னைக்கு தருவது போல இங்கும் தர வேண்டும்
கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட வெள்ள நிவாரணத்தொகையை அதிமுகவினர் முறையாக செயல்படுத்தவில்லை. அந்ததொகையை இனியாவது மக்கள் பயன்பெறும் வகையில் முறையாக முழுமையாக செயல்படுத்தவேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்னையில் எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டதோ அதே அளவிற்கு உரிய நிவாரணம் வழங்கிடவேண்டும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் அவலங்களை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications