வருது வருது.. தமிழ்நாடு முழுவதும் வாகன பிரசாரம்- விஜய் அதிரடி வியூகம்- தவெகவினருக்கு பறந்த உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் இந்த பிரசார பயணத்துக்கு முன்னதாக தவெகவினர் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பிரசாரத்தை முன்னெடுக்கவும் அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்துள்ளது. இதற்கு சவால்விடுக்கும் வகையில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தவெக ஆகியவை தனித்தே களம் காணக் கூடிய சூழ்நிலைகள் உள்ளன.

நடிகர் விஜய்யின் தவெக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியை தவெக கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு பாஜகவுடன் கை கோர்த்துவிட்டதாகவும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் தவெக தனித்துதான் களம் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமிழகம் முழுவதும் வாகன பிரசாரம் செய்யவும் விஜய் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதற்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், வாகன பிரசாரம் மூலம் தவெகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம். நடிகர் விஜய்யின் வாகன பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக இந்த பிரசார பயணத்தை கட்சி நிர்வாகிகள் முடித்து கட்சித் தலைமைக்கு தகவல் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தல் களத்துக்கு தனித்தே வருகிறது தவெக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications