சேரன்மகாதேவி: நகைகள் கிடைக்காத ஆத்திரத்தில் கோவிலில் சாமி சிலைகளை உடைத்த திருடர்கள்
நெல்லை: சேரன்மகாதேவி அருகே, முருகன் கோவில் ஒன்றில் நகைகள் கிடைக்காத ஏமாற்றத்தில் கொள்ளையர்கள் சாமி சிலையை உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் மலைஅடிவாரத்தில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் காலையில் பூஜைகள் நடக்கும்.
விழா காலங்களில் மட்டும் சுவாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு காலை, மாலை இரு வேளையும் பூஜைகள் நடக்கும். விழா முடிந்ததும் பாதுகாப்பு கருதி கோயில் பொறுப்பாளர் நகைகள் மற்றும் பூஜைக்குரிய சில்வர் மற்றும் பித்தளை பொருட்களை எடுத்து சென்று விடுவார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் சிலர் பூட்டை உடைத்து அந்த கோயிலுக்குள் புகுந்துள்ளனர். அங்கு உண்டியல் மற்றும் சாமி சிலைகளில் நகைகள் உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, சித்தர் பீடத்தில் உள்ள சிலை ஆகியவற்றை உடைத்துள்ளனர்.
விநாயகர் சிலையை பெயர்த்து கீழே தள்ளியுள்ளனர். கருவறையில் உள்ள கதவை திறக்க முயன்றும் முடியாததால் கதவுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில் காலை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் கோயிலில் இருநது புகை வருவதை பார்த்ததும் அங்கு சென்று பார்த்து போது கதவு எரிந்து கொண்டிருந்தது. உடனே அங்குள்ள பம்பில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த கோயிலில் கடந்த வாரம் வைகாசி விசாகம் திருவிழா நடந்தது. இதனால் உண்டியலில் ஏராளமான பணம் மற்றும் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் இருக்கும் என நினைத்து கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications