சாப்பிடக் கூட விடாமல் கைதி போல் நடத்தினர்.. மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய வைகோ வேதனை!
சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் மலேசிய விமான நிலையத்தில் தம்மை கைதி போல் நடத்தியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் மலேசிய விமான நிலையத்தில் தம்மை கைதி போல் நடத்தியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அரசு அவரை இன்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக மலேசியா சென்றேன். விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது. எனவே மலேசியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.
அவர்களிடம் திருமண பத்திரிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்தபோதும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்து கொண்டு சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் விமான நிலையத்திலேயே 16 மணி நேரம் கைதி போல் நடத்தினர். 24 மணிநேரமாக உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் எனக்கு மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது. புலிகள் ஆதரவு குரல் எங்கும் ஒலிக்கக் கூடாது என இலங்கை அரசு நினைக்கிறது.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். எனக்கு ஆதரவளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications