சமூக விரோத கூடாரமாக மாறிய தமிழகம்: சம்பத் படுகொலைக்கு வைகோ கண்டனம்
சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு குட்டிச்சுவராய் மாறி, சமூக விரோதிகளின் கூடாரமாய் தமிழகம் உருவெடுத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் பெருமாநல்லூர் சம்பத் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மாவட்ட இலக்கிய அணி புரவலராக, மக்களின் பேராதரவுடன் திறம்பட பணியாற்றி, 2006 முதல் 2011 வரை காட்டாங்குளத்தூர் ஒன்றியம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக பணியாற்றி வந்த கழகக் கண்மணி பெருமாட்டுநல்லூர் சம்பத் இன்று (19.12.2013) காலை 6 மணியளவில், 8 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகள் கீர்த்தனாவை டியூசன் படிக்க அழைத்துச் செல்லும்போது, கொலைவெறி பிடித்து அலையும் சமூக விரோத கும்பலால் வழிமறித்து தன் மகளின் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகம் தோற்றுவித்த நாள் முதல் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி ஆண்டுதோறும் பெருமாட்டுநல்லூர் கிராமத்தின் மேன்மைக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளையும், தை திருநாள் பொங்கல் பண்டிகையையும் சமூக விழாவாகக் கொண்டாடி வந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெருமாட்டுநல்லூரில் அவரின் புதிய இல்லத்தை திறந்து வைத்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்த என் அன்பு தம்பியை, சமூக விரோதிகள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்ற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு குட்டிச்சுவராய் மாறி, சமூக விரோதிகளின் கூடாரமாய் தமிழகம் உருவெடுத்துள்ளது. கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.
தமிழக அரசு மக்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைப்பிடி தளர்ந்து கொண்டு இருக்கிறது. காவல்துறையினர், கூலிப்படைகளை தங்கவைத்து, திட்டம் வகுத்துக் கொடுத்து பெருமாட்டுநல்லூரில் இப்படுகொலையை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த காட்டுமிராண்டித் தனமானச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். பெருமாட்டுநல்லூர் சம்பத்தை பறிகொடுத்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், கழகக் கண்மணிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications