என் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா.. மலேசியாவில் ஓடிவந்த தமிழ் அதிகாரி.. வைகோ நெகிழ்ச்சி
சென்னை: சாப்பிட முடியாமல் தவித்த வைகோவுக்கு, தனது வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து தரட்டுமா என கேட்டுள்ளார் மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரி.
மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை சுமார் 16 மணிநேரங்கள் விமான நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்தினர் அதிகாரிகள். பினாங்கு முதல்வர், துணை முதல்வர் போன்றோர் முயற்சி எடுத்தும்கூட, அந்த நாட்டு உள்துறை அமைச்சகமோ, மலேசியாவுக்கே, வைகோ ஆபத்தானவர் என கூறி இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட்டது. மலேசிய அதிகாரிகள் வைகோவை தடுத்து நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதி போல நடத்திய அதிகாரிகள்
இதுகுறித்து தாயகம் திரும்பியதும், சென்னை விமான நிலையத்தில் வைகோ குமுறல் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டார்கள். கோலாலம்பூர் நிலையத்தில் உணவகங்கள் இருக்கின்றன. 11.30 மணி ஆகிவிட்டது. ஏதாவது சாப்பிடலாமா என்று நினைத்தால், நீங்கள் இங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது. உங்கள் செயலாளர் வேண்டுமென்றால் போய் வாங்கிக்கொண்டு வரட்டும் என்றார்கள். இப்படி அவர்கள் என்னை ஒரு கைதி போன்று வைத்ததால், எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

அன்பான பெண் அதிகாரிகள்
அதேநேரம், எல்லா அதிகாரிகளும் மோசம் இல்லை. அங்கு இருந்த பெண் அதிகாரிகள் மிகவும் அன்பாகத்தான் பேசினார்கள். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டது. எனவே நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்கள். காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை16 மணி நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருந்தேன். இருந்தாலும், கைதி மாதிரி வைக்கப்பட்டிருந்ததால், சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. இதுபற்றி அவர்களும் எதுவும் கேட்கவில்லை.

இலங்கை சதி
2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ததை நான் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டு இருந்தேன். அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதரக அதிகாரியாக அம்சா இருந்தார். அவர் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். அவர் என்னைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, அனைத்து நாட்டு தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார். இதனால்தான் இப்போது பல நாட்டு தூதரகங்களும் என்னை எதிரியாக பார்க்கின்றன.

பேரக்குழந்தைகளை கூட பார்க்க முடியவில்லை
என் மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு விசா வாங்கச் சென்றபோது, உங்களுக்கு விசா தர முடியாது; நீங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருக்கின்றீர்கள் என்றார்கள். எனவே மகளையோ பேரக்குழந்தைகளையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எனக்கு விசா கொடுக்கவில்லை. மலேசியாவில் மட்டும் துணை முதல்வர் முயற்சியில் முன்பு எனக்கு இரண்டு முறை விசா கிடைத்தது. இதுதான் காரணம்.

தமிழ் அதிகாரி
இப்போது, மலேசியாவில் இந்திய தூதரக அதிகாரியாக திருமூர்த்தி என்ற தமிழர் இருக்கின்றார். அவர் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மாலை 5 மணியளவில் மிகவும் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார். இந்த நேரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றோமே? இன்றைக்கு நீங்கள் வருகிறீர்கள் என்பது தெரியாது. நீங்கள் வருவதாக மலேசிய செய்தித்தாள்களில் தகவல் அறிந்திருந்தேன். நீங்கள் சாப்பிடக்கூட இல்லை என்பது மிகவும் கவலையாக இருக்கிறது. என் வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? என்று கேட்டார்.

சாப்பிட்டதை போல உள்ளது
ஆனால் நான்தான் வேண்டாம் என கூறிவிட்டேன். இப்பொழுது நீங்கள் சாப்பாடு அனுப்ப முடியாது. எட்டு மணிக்கு என்னை விமானத்தில் ஏற்றப்போகின்றார்கள். நீங்கள் கேட்டதே எனக்குச் சாப்பிட்டது போன்று இருக்கிறது என்றேன். அதன்பிறகு எனது செல்போனை எனது செயலாளர் அருணகிரியிடம் கொடுத்து விட்டேன். இவரையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டார்கள். என்னைத் தனியாக வைத்துவிட்டார்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications