For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நிலச்சரிவு: மலையகத் தமிழர்கள் மறுவாழ்விற்கும் நடவடிக்கை தேவை– வைகோ, வேல்முருகன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இலங்கை அரசை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரிய பெத்தை எனும் இடத்தில் மழையின் காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்; மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. பெருமளவு வீடுகள் இடிந்து போயிருக்கின்றன.

மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது. ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

Vaiko, Velmurugan urge Indian govt to advise SL Govt to speedup relief works in South Lanka

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடிஉரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி- இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடிஉரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை.

இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்கையும் வஞ்சிக்கின்றது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்!

தி.வேல்முருகன் அறிக்கை

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த பெருந்தோட்டம் என்ற மலையகத் தமிழர்கள் வாழும் கிராமம் ஒட்டுமொத்தமாக நேற்று காலை 7 மணியளவில் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனது.

இதில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 400 தமிழர்கள் மண்ணில் புதைந்து போயினர் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இதுவரை 150 தமிழர்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் 300 தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து மடிந்திருக்கலாம் என்ற பேரிடியான செய்திகள் வருகின்றன. இந்திய -இலங்கை அரசுகளின் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் இந்திய- இலங்கை மண்ணில் தமிழ்ச் சமூகம் பெருந்துயரை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நூற்றாண்டுகளாக கொத்தடிமைகளாக இலங்கையின் மலையகத்தில் அடிப்படை வசதிகளற்ற கேட்பாரற்ற நிலையில் பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இயற்கையும் இப்போது கொடுந்துயருக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கையின் மலையகப் பகுதி பெரும் நிலச்சரிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எத்தனையோ அமைப்புகள் எச்சரித்த போதும் சிங்களப் பேரினவாத அரசு மலையகத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவில்லை. மலையகத் தமிழர்களின் இந்த பெருந்துயரத்துக்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மலையகத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தித் தரவும் தேவையான நிவாரண நிதி உதவி வழங்கவும் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு உடனே வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Leaders Vaiko, Velmurugan have urged the Indian govt to advise SL Govt to speedup relief works in South Lanka, where landslide killed 300 Indian Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X