சபரீசனுக்கு எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை போன் செய்துள்ளார் தெரியுமா?- வைத்திலிங்கம் பரபரப்பு
தஞ்சை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு எடப்பாடி எத்தனை முறை போன் செய்துள்ளார் தெரியுமா என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒரத்தநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்கவில்லை.

யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் ஒரத்தநாடு மக்களுக்கு தெரியாதது போல் பொய்யை பேசியுள்ளார். தமிழகத்தில் இரு கால்நடை மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு ஒரத்தநாட்டிற்கு மூன்றாவது கால்நடை மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தேன்.
வேளாண்மை கல்லூரியும் ஐடிஐ பேராவூரணியில் கலைக் கல்லூரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி கொண்டு வந்தேன். தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சிக்காக தரம் உயர்த்தி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சாவூர் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
அதே போல வேலைவாய்ப்புகளில் சுமார் 1000 பேருக்கு மேல் என்னால் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். நிறைய மாணவர்கள் பொறியியல், வேளாண், மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதே எடப்பாடி பழனிசாமி 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வைத்திலிங்கம் திறமையானவர். இந்தத் தொகுதிக்கு நிறைய செய்தவர் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
இன்று என்ன பேசுகிறோம் என தெரியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று தான் முதல்வராக இருந்தோமே என்ற எண்ணம் கூட இல்லாமல் தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசிவிட்டு சென்றுள்ளார். நான் எதையும் கேட்கவில்லையாம். தஞ்சைக்கு சட்டக் கல்லூரி வேண்டும் என கேட்டேன். மாவட்ட நீதிமன்றம் இடம் பெயர்ந்து விட்டது. அது காலியாக உள்ளது என்றேன்.
அப்போது நீங்கள்தான் ஜெயலலிதாவிடம் எல்லாவற்றையும் கேட்டு பெற்றுவீட்டீர்கள். சட்டக்கலூரி அமைக்க 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என சொன்னாரா இல்லையா இந்த எடப்பாடி பழனிசாமி. ஆயிரம் ஓபிஎஸ், வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார். துரோகி ஓபிஎஸ்ஸும் துரோகி டிடிவி தினகரன் இணைந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

இதே எடப்பாடி பழனிசாமிதான் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வேட்பாளராக நிறுத்தி அவரை போல் வல்லவர் யாரு் இல்லை. அவரை போல் அரசியல் வித்தகர் இல்லை என பிரச்சாரத்தில் பேசியிருந்தார். இப்படி முன்னுக்கு பின் முரணாக தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தி பேசுவது. இன்றைக்கு ஓபிஎஸ், தினகரன் ஒன்று சேர்ந்துவிட்டதால் தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருகிறார்.
அதிமுகவை அழித்துக் கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு செல்ல வேண்டும். அவரை தவிர்த்துவிட்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். மக்களின் ஆதரவும், பேச்சு திறமையும் இல்லாமல் திராவிட இயக்க வரலாறு தெரியாதவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி எத்தனா முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்திலும் நிரூபிக்க முடியுமோ அப்போது நிரூபிப்போம். இவ்வாறு
வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications