ஜெயலலிதா 68வது பிறந்தநாள்: தீச்சட்டி, பால்குடம் ஏந்திய அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீடூழி வாழவும், 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக வர வேண்டியும் அதிமுக மகளிர் அணி தலைவி அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலபிஷேகம் செய்து வருகின்றனர்.
இலக்கிய அணி செயலாளரும் அமைச்சருமான பா.வளர்மதி சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்துவது வழக்கம். தொடர்ந்து 24வது ஆண்டாக இந்த ஆண்டும் இன்று தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் வடபழனியில் மகளிர் அணி செயலாளரும் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றார்கள்.வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நடந்த பால்குட ஊர்வலத்தில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டார்.

68 தீச்சட்டி
இன்று அதிகாலை வளர்மதி தலைமையில் 68 மகளிரணியினர் ஈர சேலையுடன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மன் சன்னதியில் வழிபாடு நடத்தி அனைவரும் தீச்சட்டி எடுத்தனர். தீச்சட்டி ஏந்தியபடி 3 முறை கோவிலை வலம் வந்து சன்னதியில் இறக்கினார்கள். பின்னர் முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழவும் மீண்டும் அவர் முதல்வராகவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தனர்.

680 தொழு நோயாளிகள்
பின்னர் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் 680 தொழு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். அ.தி.மு.க. இலக்கிய அணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பால் குடம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக மகளிர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் அணி சார்பில் பிரமாண்ட பால் குட ஊர்வலம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கோகுல இந்திரா தலைமையில்
மகளிர் அணி செயலாளரும் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா தலைமையில் இன்று வடபழனியில் பிரமாண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இங்கு கோவிலில் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு நடத்தி கோவில்களில் குடங்களில் பால் ஊற்றி பெண்கள் கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் புறப்பட்டார்கள். அனைவருக்கும் அமைச்சர் கோகுல இந்திரா பால் குடங்கள் எடுத்து கொடுத்தார். வடபழனி முருகன் கோவிலில் பெண்கள் சுமந்து வந்த பால் குடங்களை அமைச்சர் கோகுல இந்திரா வாங்கி குருக்களிடம் கொடுத்தார்.

2 மணி நேரம் அபிஷேகம்
2 மணி நேரத்துக்கும் மேலாக முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பால் அபிஷேகம் முடிந்ததும் முருகபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டு நீடூழி நலமுடன் வாழவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வரலாற்று வெற்றி பெறவும் இந்த அபிஷேகம், விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

ஆர்.கே.நகரில் பால்குடம்
வடசென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி மகாராணி தியேட்டர் அருகே உள்ள சித்தி வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் பால்குட ஊர்வலம் சென்றது.

தண்டையார் பேட்டை சோனியம்மன்
பால்குட ஊர்வலம் தண்டையார்பேட்டை சோனியம்மன் கோவில் சென்றடைந்தது. இங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து விசேஷ பூஜை நடந்தது. ஆயிரத்து 8 பெண்கள் பால்குடம் சுமந்து சென்றார்கள்.

வட சென்னை தெற்கு மாவட்டம்
வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நடந்த பால்குட ஊர்வலத்தில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டார். இந்த பால்குட ஊர்வலத்துக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் வேளாங்கண்ணி என்ற கஸ்தூரி செய்திருந்தார். மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாகங்கள் ஹோமங்கள்
பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டாலும் இன்று அவர் பிறந்த மகம் நட்சத்திரம் என்பதால் தமிழகம் முழுவதும் 122 கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் ஹோமங்களும் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications