வந்தே பாரத் எதிரொலி.. கோவை மக்களே.. 3 முக்கிய ரயில்களின் நேரம் நாளை முதல் மாறுகிறது!
சென்னை: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்க நேரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் புதிய ரயில் சேவையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் இயக்கத்தையொட்டி, கோவை-பெங்களூரு இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு ரயில்
அதன்படி (வண்டி எண்-22666) கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 6.18 மணிக்கு வரும். பின்னர் அங்கிருந்து 6.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரயில்நிலையத்திற்கு 7.05 மணிக்கு வரும். பின்னர் அங்கிருந்து 7.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 8.02 மணிக்கு வந்து, 8.05 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்கிறது. மறு மார்க்கத்தில் (வண்டி எண்-22655) கோவை-பெங்களூரு இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில். சேலத்திற்கு 5.52 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.50 மணிக்கும், திருப்பூருக்கு 7.38 மணிக்கும், கோவைக்கு 9 மணிக்கு சென்றடையும்.
திருப்பதி ரயில்
கோவை- திருப்பதி ரயில் கோவையில் இருந்து (வாரத்திற்கு 4 நாட்கள்) 6.10 மணிக்கு புறப்பட்டு, 6.48 மணிக்கு திருப்பூருக்கும், 7.30 மணிக்கு ஈரோடுக்கும், 8.27 மணிக்கு சேலத்திற்கும், 10.03 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும் சென்றடையும்.

இன்டர்சிட்டி ரயில்
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயில் கோவையில் இருந்து 6.20 மணிக்கு புறப்படும். பின்னர் திருப்பூருக்கு 7 மணி, ஈரோடு-7.45, சேலம்-8.42, பொம்மிடி-9.14, மொரப்பூர்-9.33, சாமல்பட்டி-9.54, ஜோலார்பேட்டை-10.33, காட்பாடி-11.33, அரக்கோணம்-12.23, பெரம்பூர்-1.08, சென்னை சென்டிரலுக்கு 1.50 மணிக்கு சென்றடையும். சென்னை-கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்சென்னை சென்டிரலில் இருந்து பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டைக்கு 5.33 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில்இயக்க நேர மாற்றம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
வந்தே பாரத்
இதனிடையே சென்னை கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், வாரத்தில் புதன்கிழமை தவிர பிற 6 நாட்கள் இயங்க உள்ளது. சென்னை -கோவை இடையே 3 ரயில் நிலையங்களில் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644) காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
ரயில் அட்டவணை
இந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் செல்லும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறபப்ட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடைய உள்ளது.

சென்னை முதல் கோவை நேரம்
மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். முன்னதாக இந்த ரயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதை தொடர்ந்து 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரயில் அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications