சிதம்பரம் கோயிலில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய தீட்சிதர்கள்.. வீடியோ எடுத்த விசிக நிர்வாகிக்கு அடி, உதை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, தீட்சிதர்கள் 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்து இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது, அங்கு தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏன் கோயிலுக்குள் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டு வீடியோ எடுத்தேன். அப்போது பல தீட்சிதர்கள் என்னை தாக்கி எனது செல்போனை பறித்துக் கொண்டனர்.
இது எங்களுடைய கோயில் உங்களால் என்ன செய்ய முடியும். நீ எங்கு போனாலும் இங்குதான் வர வேண்டும் என்று கூறி அடித்தார்கள். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
விசிக நிர்வாகியும், தீட்சிதர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எங்களுடைய அனுமதி இல்லாமல் எதற்கு வீடியோ எடுத்தீர்கள். போனை கொடுக்க முடியாது. யாருடைய அனுமதியும் இல்லாமல் வீடியோ எடுக்க கூடாது. இது எங்க கோயில். இது என்ன பொருள்காட்சியா வீடியோ எடுக்க.
சத்தம் போட்டு பேசக் கூடாது. எங்க தம்பியை ஏன் வீடியோ எடுக்கிறீர்கள். செல்போனை தர முடியாது. ஆகறதை பார்த்துக் கொள்ளுங்கள். எடுக்க கூடாதுனா கூடாது. ஐபிஎல் மேட்சா நடக்குது வீடியோ எடுக்க. என்னை விட பெரியவர் நீங்கள் நான் பேசினா அசிங்கமா போய்விடும். உங்க வீட்டில் வந்து எடுத்தால் சும்மா இருப்பீர்களா என்கின்றனர் தீட்சிதர்கள். அப்போது விசிக நிர்வாகி, கிரிக்கெட் விளையாடியதால் வீடியோ எடுத்தேன். ஏன் வீடியோ எடுக்க கூடாது. எனக்கு பிடித்திருந்தது நான் எடுத்தேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications