தலித் மற்றும் பெண்கள் வங்கி, சர்வதேச நீதிமன்றத்தில் மீனவர் பிரச்சனை-வி.சி. தேர்தல் அறிக்கையில் உறுதி
சென்னை: தலித் மற்றும் பெண்களுக்கு வங்கிகளை உருவாக்குவோம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு தமிழக மீனவர் பிரச்சனையை கொண்டு செல்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவை அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

வகுப்புவாத வன்முறை மசோதா
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்ட வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு சட்ட வடிவம் கொடுக்க விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர் உள்ளிட்ட இதர சிறுபான்மை மதத்தவரின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும் இதர உரிமைகளை மீட்டெடுக்கவும் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடும்.

குடிசைகள் இல்லா இந்தியா
தலித் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீட்டுடன் உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

தலித் இடஒதுக்கீடு
நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், சட்டமன்ற மேலவைகளிலும் தலித் மக்களுக்குரிய இடஒதுக்கீட்டை வென்று எடுக்க விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் சுயநிதி அதிகாரம் கொண்டவையாக அமைந்திட விடுதலை சிறுத்தைகள் பாடுபடும்.

தலித் வங்கிகள்..
தலித் வங்கியை உருவாக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளும். இயற்கை பேரிடர்களை தாங்கக்கூடிய பாதுகாப்பான குடியிருப்புகளை வழங்கவும், இந்தியாவில் குடிசை வீடுகளே இல்லை என்னும் நிலையை படிப்படியாக எட்டவும், அவற்றிற்குரிய திட்டங்களை தீட்டவும் உரிய நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் மேற்கொள்ளும். உயர் கல்வியை தொடர முடியாத இளைஞர்களின் மனித ஆற்றல் வீணாகாமல் பயன்படுத்துவதற்கு வசதியாக அவர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்.

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு
மலை பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்களை அவர்களது பாரம்பரியமான நிலத்திலிருந்து அகற்றுகிற முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த சதித்திட்டத்தை முறியடித்து அவர்களது மரபான உரிமைகளை நிலை நாட்டிட விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். மகளிருக்கு வங்கி, வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கவும், மகளிர் பாதுகாப்புக்குரிய சிறப்பு சட்டங்களை கொண்டு வரவும் விடுதலை சிறுத்தைகள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

நதிநீர் உரிமைகள்..
தமிழகத்துக்குரிய நதிநீர் உரிமைகளை பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும்.

நீதிமன்ற மொழியாக தமிழ்
உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலேயே அமைய வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக்குவதற்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும்.

மீனவர் பிரச்சனை
இலங்கை கடற்படையால் இதுவரையிலும் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உரிய வகையில் இலங்கை அரசை கண்டிக்கவும், தமிழக மீனவர்களுக்குரிய இழப்பீட்டை பெற்றுத்தரவும் வேண்டுமென இந்தியாவை விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்.

சேதுக்கால்வாய் திட்டம்
சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக உள்ள நீதிமன்ற தடைகளை உடைப்பதற்கும், மதவெறி சக்திகள் சேது பாலத்தை புனித பகுதியாய் அறிவிப்போம் எனக்கூறுகின்ற சதிச்செயலை முறியடிப்பதற்கும் விடுதலை சிறுத்தைகள் உழைக்கும்.

ஈழத் தமிழர் பிரச்சனை
ஈழத்தமிழர் பிரச்சினையை நாம் எழுப்புகின்ற நேரத்திலெல்லாம் அது ஓர் அந்நிய நாடு, அதன் பிரச்சினையில் நாம் தலையிடக்கூடாது என இந்தியா தட்டிக்கழித்து வருகிறது. இந்த நிலையை மாற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும்.

ஈழ அகதிகள்
அகதிகளின் நலன்களுக்காக ஐ.நா. சபை உருவாக்கியுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாத காரணத்தினால் இங்குவந்து தங்கியுள்ள அகதிகளுக்கு உரிய உரிமைகளும் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இந்த அவலநிலையை போக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்.

ஒரு நாள் கூலி ரூ300
விவசாய தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியை நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் என உயர்த்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் பாடுபடும்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications