வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. கார் விபத்தில் படுகாயம்... மதுரை அருகே லாரி மீது கார் மோதியது
மதுரை: துக்க நிகழ்ச்சிக்காக பரமக்குடிக்குச் சென்ற சென்னை வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.அசோக், மதுரை அருகே நடந்த கார் விபத்தில் காயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக். இவர் பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இன்று தனது மனைவி நித்யா மற்றும் உறவினர் முல்லை செல்வம் ஆகியோரோடு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். காரை டிரைவர் கண்ணன் ஓட்டினார்.
எம்.எல்.ஏ.வின் கார் இன்று காலை 6 மணியளவில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி கச்சராயன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அசோக் எம்.எல்.ஏ., அவரது மனைவி நித்யா, உறவினர் முல்லை செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொட்டாம்பட்டி போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications