ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு வேல்முருகன் கோரிக்கை
ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு தன்வயப்படுத்துவதால் ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று புதன்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், "2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு.
ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா 2018-ஐ எதிர்க்கட்சிகள் ஒருசேர எதிர்க்கின்றன. அதோடு, தகவல் ஆணையமே இத்திருத்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்கான காரணத்தையும் அது தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா-2018, தலைமைத் தகவல் ஆணையர் உள்ளிட்ட தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் குறித்த விதிமுறைகளை வகுக்க வேண்டி கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிடுகிறது. இது தகவல் ஆணையத்தை ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளது. இத்திருத்த மசோதாவின்படி, தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் இவற்றை இனி மாநில அரசுகள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும். அப்படியென்றால் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்றாகிறது. அதோடு தகவல் ஆணையத்தின் சுய அதிகாரமும் பறிபோகிறது.
மேலும், ஆர்டிஐ சட்டம் என்பது அரசியல் சாசன உரிமை இல்லை என்கிறது திருத்த மசோதா. ஆனால், ஆர்டிஐ சட்டம், அரசியல் சாசன உரிமை என அந்தச் சட்டத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இப்படி எதிர்நிலையைத் திருத்த சட்டம் கொண்டிருப்பது, ஆர்டிஐ அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாக இருப்பதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகத்தான் என்பதைத் தவிர வேறில்லை.
ஆர்டிஐக்கு அரசியல் சாசன உரிமை இல்லை எனக் கூறி, தலைமைத் தகவல் ஆணையர் பதவியை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்குக் கீழாகத் தாழ்த்துகிறது மத்திய அரசு என தகவல் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. வாக்களிக்கும் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை இரண்டையும் அடிப்படை உரிமை என்றே கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், தலைமை தகவல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம் இரண்டையும் சம தளத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இந்தத் திருத்த மசோதா மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் அதிகாரத்தையே பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. இதை அனுமதிக்கக்கூடாது என்று விளக்கமளிக்கிறது தகவல் ஆணையம்.
இப்படி ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா 2018 -ன் அபாயகரத்தையும் உள்நோக்கங்களையும் குறிப்பிட்டு, அதனால் ஆர்டிஐ சட்டமே ஒன்றுமில்லாமல் செய்யப்படும் ஆபத்து இருப்பதையும் குறிப்பிட்டு, அது குறித்து அனைத்து தகவல் ஆணையர்களும் கூடி விவாதிப்போம் வாருங்கள் என்று கூறி அவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறது மத்திய தகவல் ஆணையம்.
அதாவது, அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களான அமைப்புகளை தன்வயப்படுத்திக்கொண்ட மத்திய பாஜக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் தன்வயப்படுத்துவதை முறியடித்து, தன் உரிமைகள்-அதிகாரங்களைத் தற்காத்துக் கொள்ளவுமான போராட்டத்தில் இறங்கியிருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம்.
இதனுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் தங்கள் போர்க்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். பாஜக அரசை, ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா 2018-ஐ உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், அனைத்து ஜனநாயக சக்திகளையும் இதற்கு எதிராகத் திரும்ப வேண்டும்" என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications