தமிழக-கேரள எல்லையில் நடந்த மாவோயிஸ்டுகள் வீர வணக்க கூட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
மாவோயிஸ்டுகள் நடத்திய ஆலோசனை கூட்டம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தமிழக - கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் முகாம்களில் பழங்குடி மக்களை சேர்ப்பது, அடுத்தகட்ட தாக்குதலுக்கு சபதம் ஏற்பது போன்ற ரகசிய வீடியோ காட்சிகளை கேரள போலீஸார் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், 30க்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் சிவப்பு கொடியை நட்டு, வீர வணக்கம் செலுத்துவது, போராட்டங்கள் குறித்து உரையாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பழங்குடி மக்கள் சிலர் புதிதாக இணைவது, அவர்களை மாவோயிஸ்ட்கள் வரவேற்பது போன்ற காட்சிகள் உள்ளதோடு, அதில் அனைவருமே தமிழில் முழக்கமிடுவது போன்ற காட்சிகளும் அதில் உள்ளன. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தமிழக - கேரள வனப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் நவம்பர் 22ம் தேதி படுக்கா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குப்புராஜ் மற்றும் அஜிதா ஆகிய 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் அட்டப்பாடியில் அரசுக்கு எதிரான போஸ்டர்களை மாவோயிஸ்ட்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். கொல்லப்பட்ட இருவருமே அந்த வீடியோவில் உள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரை பழி தீர்க்க வேண்டும் என அக்கூட்டத்தில் பங்கேற்ற மாவோயிஸ்டுகள் பேசிக்கொண்டது பதிவான நிலையில் அவர்களில் இரு முக்கிய புள்ளிகள் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர்.
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக எல்லைப்புற பகுதிகளை கவர் செய்து ரெட் காரிடார் அமைப்பதே மார்க்சிஸ்ட் பிரிவு மாவோயிஸ்டுகளின் நோக்கம் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது, என கியூ பிரிவு போலீசார் கூறுகிறார்கள். இந்த வீடியோ வெளியாகியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications