ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அறிக்கை மூலமாக அனைத்து எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

செப்டம்பர் 22 ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருடைய உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், அதிமுக மூத்தநிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி.ராமசந்திரன், சி.ஆர்.சரஸ்வதி, இவர்கள் தினந்தோறும் அம்மா நலமாக இருக்கிறார், அம்மா உணவு அருந்துகிறார், அம்மா மருந்துகள் சாப்பிட்டார், நன்றாக இருக்கிறார், இன்னும் சில தினங்களில் வீட்டிற்கு திரும்பிவிடுவார் என்றெல்லாம் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார்கள்.
ஆனால் இறப்பதற்கு இருதினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரும்பும்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை செய்தி வெளியிட்டது. ஆனால் இவர்கள் சொல்வதற்கு மாறாக டிசம்பர் 5 ம் தேதி தீடீர் மரணம் அடைந்தார் என்ற செய்திவந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உடலை எப்படி குழிதோண்டி புதைத்தார்களோ, அதேபோல புதைக்கப்பட்டுள்ள இந்த மரணத்தின் சந்தேகங்களை வெளிக்கொண்டுவருவதற்காக, அதிமுக கட்சியை சார்ந்த உறுப்பினர் ஜோசப் என்பவர் போராடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், முன்னால் முதலைமைச்சர் ஜெயலலிதா அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அப்போலோ மருத்துவமனைக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது வரவேற்கத்தக்கது.
எனவே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, மரணம் அடைந்த நாள் வரை 75 நாட்கள் யாரையும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு அனுமதி அளிக்காததன் விளைவுதான், இன்று சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்திற்கு கொடுத்து, அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications