விஜயகாந்த் நலம்... ஏப்.6முதல் ஆர்.கே. நகர் பிரச்சாரம் செய்வார் - பிரேமலதா
விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம் செய்வார் என்றும் அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்பும் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஏப்ரல் 6 முதல் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்றும் அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஆளும் கட்சி எதிர்கட்சி என பலரும் வாக்காளர்கள் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரேமலதா, தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார்.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே தனித்து போட்டி என்று அறிவித்த விஜயகாந்த் வேட்பாளரையும் அறிவித்தார். இதன்பின்னர் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடைத்தேர்தல் களத்தில் அதிமுக இரு அணிகளும், திமுக, பாஜக, தீபா என அனைவரும் விறு விறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்த் இன்னமும் மருத்துவமனையில் இருப்பதால் தேமுதிக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். பிரேமலதாவும் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

விஜயகாந்த் சிகிச்சை
சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஆண்டுதோறும் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். சிகிச்சை முடிந்த பின்னர் விரைவில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளார்.

ஆர்.கே. நகரில் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஜயகாந்த் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார். ஆர்.கே. நகரில் பணம் கொடுத்து வாக்குகள் விலை பேசப்படுவதாகவும் பிரேமலதா குற்றம் சாட்டினார்.

எதுவும் செய்யவில்லை
ஆளும் கட்சியாக உள்ள அதிமுக ஆர்.கே. நகரில் 5 ஆண்டுகாலம் எந்த நலத்திட்டமும் செய்யவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவை முதல்வராக்கிய தொகுதி மக்களுக்கே எதுவும் செய்யாதவர்கள் இனி என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையம்
ஆர்.கே நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிகவிற்கு ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுதேர்தல் நடைபெறும்
தமிழகத்தில் இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தல் மட்டுமல்ல விரைவில் பொதுதேர்தலே வரும் என்று கூறிய பிரேமலதா, மக்கள் புதிய கட்சியை, புதிய தலைவரை மக்கள் ஆதரிப்பாளர்கள் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications