“பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா” - விஜயகாந்த் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா என்று செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து தேமுதிக விஜயகாந்த் சாடியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு தலைமைச் செயலாளர்கள் யாரும் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் கொடுக்காத நிலையில், தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வெள்ள பாதிப்புகள் குறித்து அதிமுக அரசை கடும் விமர்சனம் செய்த பிறகு, அதற்கு பதிலளிக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன், "தூங்கி கொண்டிருந்தவர், விழித் தெழுந்தது போல்", வெளியிட்டுள்ள அறிக்கை, பல விஷயங்களை மூடிமறைத்துள்ளதை ஒருசில பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது பலத்த சந்தேகத்தையும், கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 vijayakanth statement about Opening Chembarambakkam lake water

பத்து நாட்களுக்குப் பிறகு 13 பக்க அறிக்கையை தலைமைச்செயலாளர் கொடுத்துள்ளது "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை" என்பதைப்போல உள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற் பொறியாளருக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும், முதலமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லையென பொருள்படும்படி கூறியுள்ளார் ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதிலிருந்து நேற்று வரை, தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்து விடுவதென்றால் கூட அவர்தான் உத்தரவிட்டுள்ளார் என்பதை வசதிக்கேற்ப மறந்துவிட்டாரா?

மேலும் செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைத்து, முதலமைச்சரை காப்பாற்றும் வகையில் வெளியடப்பட்டுள்ள தலைமைச்செயலாளரின் அறிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டு, பொதுப்பணித்துறையில் அவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள் மீது பழியைப்போட்டு, இந்த பிரச்சனையை திசை திருப்பியதற்காகவா?

இல்லை, மழை வெள்ள பாதிப்புகள் சென்னையை மூழ்கடித்து நிர்மூலமாக்கியபோது, அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததற்காகவா? பொதுப்பணித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பாக எரிசக்திதுறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தில்தான் அரங்கேறும்.

சென்னையே வெள்ளத்தில் மூழ்கி மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றபோது, நேரத்தை வீணடித்து, நீண்ட நெடிய அறிக்கை அளித்த பொதுப்பணித்துறை அமைச்சருக்கு, தனது கட்டுப்பாட்டில் வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலையை பற்றி மக்களிடம் விளக்கம் அளிக்க நேரம் இல்லையா? இல்லை, முன்னாள் முதலமைச்சரை, இந்நாள் முதலமைச்சர் வாய்திறக்கச் சொல்லி அனுமதி கொடுக்கவில்லையா? இல்லை, இவரிடமிருந்த பொதுப்பணித்துறை அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதா?

பொதுப்பணித்துறைக்கு அமைச்சர் மற்றும் துறை செயலாளர் இருக்கும்போது, நடைமுறையில் இல்லாத வழக்கமாக தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? யாரை காப்பாற்ற இந்த நாடகம் நடக்கிறதென்பது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். "பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பொருத்தமாக உள்ளது.

இதுநாள் வரையிலும் எல்லாவற்றிற்கும் நான்தான் என உரிமை கொண்டாடி பதிலளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால், தான் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதை மனதில் கொண்டு, மக்களுக்கு பதில் சொல்வதற்கு மட்டும் அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்கிறார்.

அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள். பிரச்சனை என்று வரும்போது அதிகாரிகள் மீது பழியை சுமத்திவிட்டு, தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நடந்துகொள்வதும், அமைதியாக இருப்பதும் ஜெயலிதாவிற்கே உரித்தான கலையாகும்.

தற்போது அவர் ஆற்றியுள்ள வாட்ஸ்ஆப் உரையில் மக்களின் துன்பங்களுக்கு அதிமுக அரசு என்ன செய்யபோகிறது என்பதைப் பற்றி கூறாமல், தான் ஒருவர்தான் மக்களை காப்பாற்ற பிறந்தவர் போல பேசியுள்ளார். இப்படியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றியது போதும், இனியும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. இனியாவது தமிழக மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரடியாக பதிலளிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+