தமிழகஅரசின் செயல்பாடுகளை கண்காணிக்க கூட்டுக்குழு: மோடிக்கு விஜயகாந்த் கடிதம்
சென்னை: தமிழகத்தில் குடிநீர், மின்சாரம், மணல் கொள்ளை, மீனவர்கள், ஈழத் தமிழர் உள்ளிட்ட 9பிரச்சனைக்கு தீர்வு காண கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியநாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்லத் தேவையான நேர்மையும்,தைரியமும் தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி என்பதை நிரூபித்து அதன் சார்பில் பாரதப் பிரதமராய் பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேசத்தை நமது மக்கள் எதிர்பார்க்கும் ஊழலற்ற, ஒளிமயமான வல்லரசாக மாற்றிட உங்கள் பணி சிறப்பாக அமைந்திட தங்களை வாழ்த்தி அதற்குத்தேவையான உடல் பலத்தையும், மனதைரியத்தையும் தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்கள் தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவண செய்யவேண்டும்.

குடிநீர் பிரச்சினை
தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தைப் போக்கி அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நதிகள் தேசியமயம்
நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி, தமிழகத்தின் நீராதாரத்தை பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்.

மின்சாரத்தின் அளவை உயர்த்துக
தமிழ்நாட்டின் மின்வெட்டுப்பிரச்சினையை போக்கிட, மத்திய அரசின் தமிழ்நாட்டிற்கான மின்ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும்.

கனிமவளக்கொள்ளை
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனிம மணல்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த கனிமவளங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்.

மீனவர் பிரச்சினை
இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சினை
இலங்கையில் உள்ள தமிழர்கள் போரினால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட்டு, அனைத்து உரிமைகளோடும் சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்படுவதை தங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.

தரமான மருத்துவம்
அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி எல்லோருக்கும் எல்லா இடத்திலும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

சமச்சீரான கல்வி
எல்லோருக்கும் சமச்சீரான கல்வி கிடைத்திட அரசு பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தரம் உயர்த்தவேண்டும்.

சாலைமேம்பாடு
தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை,மேம்பாலங்கள் போன்றவை மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்படாததால் மாநில அரசின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசை கண்காணிக்க
இவைகள் மாநில அரசின் கீழ் வந்தாலும் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, மத்திய, மாநில அரசு, எதிர்க்கட்சி கொண்ட கூட்டுக்குழு அமைத்து தமிழக அரசின் செயல்திட்டங்களை கண்காணித்து வழிநடத்தவேண்டும்.












Click it and Unblock the Notifications