அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடியும் வரை பொறுமை காப்போம்: தா.பாண்டியன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டு தங்களுக்கு தொகுதிகளை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்குவார் என்று நம்பும் அவர்கள் அதிமுகவிடம் இருந்து அழைப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களை அப்படியே காக்க வைத்தபடி தனது பிரச்சாரத்தையும் துவக்கிவிட்டார் ஜெயலலிதா. இதனால் கம்யூனிஸ்டுகள் தரப்பில் பீதி நிலவுகிறது.
இந் நிலையில், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தா. பாண்டியன் கலந்து கொண்டு பேசியபோது,
''ராணுவத்தின் மூலம் சர்வாதிகார -ஆட்சியை அமைக்க முயற்சி செய்யும் மோடி பிரதமராக வாய்ப்பே இல்லை. பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே 3-வது அணி அமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது அணி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்க்க அனுமதிக்க மாட்டோம்.
மக்களுக்காக ரத்தம் சிந்திய பூமி நாகை என்பதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகை நாடாளுமன்ற தொகுதி மீது தனி மதிப்பு உண்டு. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் வரை கட்சியினர் பொறுமை காக்க வேண்டும்.
பெருமை மீகு தியாகங்கள் செய்த இடதுசாரிகள் கூட்டணிப் பேச்சில் காலம் தாழ்த்தி அவலப்படலாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்கிறார்.
25 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நீங்கள் (தி.மு.க.) செய்த சாதனைகள் என்ன என்று கூற முடியுமா? மத்திய ஆட்சியில் பங்கேற்ற போது ஈழத்தமிழர் படுகொலையை தடுத்தீர்களா? இது தான் தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த பெருமைகளா? தமிழகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை தி.மு.க. செய்யவில்லை என்றார்












Click it and Unblock the Notifications