ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா சட்டசபை பெஞ்சுகளை மாற்றணும்: ஸ்டாலின்
சென்னை: திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் முதல்வேலையே சட்டசபையில் உள்ள பெஞ்ச்களை மாற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்பேது ஆளும் அதிமுகவினர் சட்டசபையை பஜனை மடம் போல மாற்றிவிட்டனர் என்றும், ஜெயலலிதாவின் பெயரை சொல்லும் போதோ... அல்லது ஜெயலலிதா உரையை வாசிக்கும் போதோ வரிக்கு வரி பெஞ்சுகளை தட்டி தட்டி அதை உடைத்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ளன. அரசியல் களம் அக்னி வெயிலை விட படு சூடாக உள்ளது. ஆளுங்கட்சிகளைப் பற்றி எதிர்கட்சியினரும், எதிர்கட்சிகளைப் பற்றி ஆளும்கட்சியினரும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே சன்டிவியில் 'ஸ்டாலினிடம் கேளுங்கள்' நிகழ்ச்சியில் வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின். அரசியல் மட்டுமல்லாது, அவரது பொழுதுபோக்கு, ஆர்வம் பற்றியும், திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.
மின் உற்பத்தி
அதிமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்றனர். ஆனால் இந்த 5 ஆண்டுகாலத்தில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்றார் ஸ்டாலின். மின்சார உற்பத்திக்காக திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை கிடப்பில் போட்டனர்.
மின் கொள்முதலில் ஊழல்
உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தியிருந்தாலே மின்சாரம் உற்பத்தி செய்திருக்க முடியும். அதை கிடப்பில் போட்டு விட்டு வெளி மாநிலத்தில் இருந்து மின் சாரத்தை வாங்கினர். அப்போதுதானே ஊழல் செய்ய முடியும். ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் பொய்யான தகவலையே கூறுகின்றனர் என்றார் ஸ்டாலின்.
காவலர் பிரச்சினை
மக்களின் பிரச்சினை போக்கும் காவல்துறையினரின் பிரச்சினை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு காவல்துறையினரின் குறைகளை கேட்பதற்கு 4வது போலீஸ் கமிஷன் அமைக்கப்படும் என்று ஸ்டாலின்.
தொழிற்சாலைகள்
சிறு குறு தொழில்கள் மழை காலத்தில் முற்றிலும் முடங்கி போனது என்று ஒருவர் கூறவே, இந்த ஆட்சி காலத்தில் முதல்வரையோ, அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ தொழிலதிபர்கள் சந்தித்து பேச அப்பாயிண்மெண்ட் கிடைப்பதில்லை என்றார் ஸ்டாலின். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் தொழில்துறையில் முன்னேற்றப்பாதையில் சென்றது என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி
உணவளிக்கும் விவசாயிகள் வறுமையில் இருக்கிறார்கள் என்று ஓருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன ஸ்டாலின், திமுக ஆட்சிகாலத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக அளிக்கப்பட்டது. 7000 கோடி கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடப்போகிறோம் என்றார்.
அதிமுகவின் திட்டங்கள்
எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் தொடரப்பட்டது. 1989ம் ஆண்டு உணவுடன் முட்டை கொடுக்கப்பட்டது. பாலுடன் சத்துணவு கொடுக்கப்படும் என்று கூறினார்.
அண்ணா உணவகம்
ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இது பெரும்பாலான ஏழைகளுக்கு பலனில்லை. அதை நிறுத்தாமல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை செம்மைபடுத்தி அறிஞர் அண்ணா உணவகம் ஆக மாற்றுவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமைச் செயலகத்தை 99 சதவிகிதம் முடித்தோம். செயல்பட ஆரம்பித்தது. அந்த தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள் அரசுக்கு வீண் செலவு ஏற்பட்டது. கொடநாட்டில் டெம்பரவரி தலைமைச் செயலகம் செயல்படுத்தினார் ஜெயலலிதா என்று குற்றம் சாட்டினார்.
பெஞ்ச்களை மாற்ற வேண்டும்
முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர் தலைமைச் செயலகம் இங்கேயே செயல்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமா என்பதை முடிவெடுப்பார் என்று கூறிய ஸ்டாலின். தற்போது உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அதிகமாக பெஞ்ச்களை தட்டியதில் அவை உடைந்து விட்டன, முதல்வேலையாக அந்த பெஞ்ச்களை மாற்ற வேண்டும் என்றார்.
திமுகவிற்கு வாக்களியுங்கள்
அதிமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டுமானால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறிய ஸ்டாலின், தற்போது தேர்தல் ஆணையம் 20 சதவிகிதம் பணத்தை மட்டுமே பிடித்துள்ளது என்றார். ஆளும் கட்சியினர் என்னதான் பணம் கொடுத்தாலும் மக்கள் யாருக்கு ஒட்டளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications