செங்கோட்டைக்கான ரயில் டிரைவர் நான்.. நாம் சென்றடைவதை யாராலும் தடுக்க முடியாது- ஜெ.

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கூறியதாவது:
மத்தியில் வழிநடத்த ஆளில்லாமல் தமிழகம் திண்டாடுகிறது. தமிழகம் பிழைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற வேண்டும்.
ஆட்சி மன்றக்குழு யாரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு முழு மனதுடன் பாடுபட வேண்டும்.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு நடைபெறும் போது இந்த நாட்டையே வழிநடத்தும் சக்தியாக அதிமுக இருக்கவேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
புனித ஜார்ஜ் கோட்டையினை 6 முறை ஆண்டுள்ளது அதிமுக.
2014ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையை அடைவோம். ரயில் வண்டியை ஓட்டிச் செல்ல எஞ்சின் டிரைவர் நான் இருக்கிறேன். பயணிகளாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக ஆக்கவேண்டும். உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். செய்து முடிக்கவேண்டும் என்று நம்பிவிட்டால் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றிபெற வேண்டும் என்பதே அதிமுகவின் இலக்கு. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும். செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல பாரததேசத்தின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. அடுத்தமுறை பொதுக்குழு கூடும் போது நான் மத்தியில் ஆட்சி செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும். அமைதி, வளம் வளர்ச்சியை தாரக மந்திரமாக கொள்ளவேண்டும். அண்ணா நாமம் வாழ்க. புரட்சிச் தலைவர் நாமம் வாழ்க என்று தொண்டர்களிடம் உற்சாகம் பொங்க பேசினார் ஜெயலலிதா












Click it and Unblock the Notifications