வைகோ திடீரென பச்சை துண்டை தலையில் கட்ட என்ன காரணம்? தமிழிசை தடாலடி
நெல்லை: தனது தலையில் பச்சை துண்டை கட்டியிருப்பது விவசாயிகளை ஆதரிக்கவா அல்லது ஜோசியரின் பேச்சை கேட்டா என்பதை வைகோ தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையில் கட்சி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

பாஜக
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் தொலைநோக்கு திட்டங்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.

இளங்கோவன்
எங்களுக்கு ஆதரவு பெருகி வருவது எங்களை எதிர்ப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால் தான் நாங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்று அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். முதலில் அவர்கள் கட்சியில் சமூக நீதி உள்ளதா என்று பார்த்துவிட்டு பிறரை பற்றி இளங்கோவன் பேசட்டும்.

அதிமுக
காங்கிரஸ் கட்சியை போன்று அதிமுகவும் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சாரம் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது. அவர் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து பேச எந்த கட்சியும் இருக்கக் கூடாது என்ற இறுமாப்பில் உள்ளது அதிமுக. அதிமுக ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் மாநில அரசு செயலற்ற அரசாக இருந்தது.

மக்கள் நலக் கூட்டணி
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியிடம் ஒரு மாதிரியாகவும், பிற கட்சிகளிடம் வேறு மாதிரியாகவும் நடந்து கொள்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் இன்னும் ஒரே குழப்பமாக உள்ளது. தனது தலையில் பச்சை துண்டை கட்டியிருப்பது விவசாயிகளை ஆதரிக்கவா அல்லது ஜோசியரின் பேச்சை கேட்டா என்பதை வைகோ தெளிவுபடுத்த வேண்டும்.

கருணாநிதி
திராவிடக் கட்சிகளின் பரிணாமம் கலர் கலர் துண்டுகளில் வெளிப்படும். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிகிறார். தற்போது வைகோ பச்சை துண்டை அணிந்து வருகிறார். இதற்கான காரணத்தை அவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications