ஜன்னலோரம் உட்கார்ந்த எஸ்.ஐ. மனைவி.. பக்கத்துல அஞ்சலி.. அடுத்தடுத்து நடந்த சம்பவம்: தென்காசி பரபரப்பு
தென்காசி: கைக்குழந்தையுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து இளம்பெண் தந்த புகார், மிகப்பெரிய அதிர்ச்சியை போலீஸ்காரர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது.
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியை சேர்ந்தவர் சிமி.. இவர் தன்னுடைய கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு, தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.. கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தார். அந்த புகாரில் சிமி சொல்லியிருப்பதாவது:

"கடந்த 12ம் தேதி சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு வீடுவீடாக சென்று பழைய துணிகளை வாங்குவதற்காக நானும், எனது அக்காவான பவானி மற்றும் உறவினர் பெண்ணான அஞ்சலி ஆகிய மூவரும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தோம். அப்போது பஸ்ஸின் சீட்டில், சேர்ந்தமரம் எஸ்ஐயின் மனைவி, உட்கார்ந்திருந்தார். அவர் அருகே எனது உறவினர் பெண்ணான அஞ்சலி அதே சீட்டில் உட்கார்ந்தார்.
டிக்கெட்: அப்போது அந்த சீட்டிலிருந்த எஸ்ஐ மனைவி, எங்களை வேறு சீட்டில் சென்று உட்காருமாறு சொன்னார். ஆனால், "நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் டிக்கெட் எடுத்து தான் பஸ்சில் பயணிக்கிறோம்" என்று அஞ்சலி சொன்னார்.
இதனால் கோபம் அடைந்த எஸ்ஐ மனைவி, மயிலப்பபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சென்றார். பிறகு, சில கி.மீ. கடந்து நரையப்பபுரம் பகுதியில் எங்கள் பஸ் சென்றபோது, அங்கு போலீஸ்காரர்கள் இருவருடன் வந்து மறித்த எஸ்.ஐ. மனைவி, தனது மணிபர்சை காணவில்லை என்று கூறினார். உடனே பஸ்சின் கண்டக்டர், கீழே கிடந்த பர்ஸை எடுத்து கொடுத்தார்.. அந்த பர்சில் சில நூறு ரூபாய் வைத்து எஸ்.ஐ. மனைவி கண்டக்டரிடம் கொடுத்தார்.
திருட்டு பட்டம்: பிறகு, அஞ்சலி மற்றும் எனது அக்கா பவானி உட்பட எங்கள் மூவரையும் போலீசார் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், நீண்ட நேரம் காக்க வைத்தனர்.. எனது அக்கா பவானி மற்றும் அஞ்சலி மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
எந்தவிதமான தவறும் செய்யாமலேயே பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்கள்மீது பொய் வழக்குப்பதிவு செய்த கடையம் காவல்துறையினர் மீதும் எங்கள் மீது பொய் வழக்கு கொடுத்த எஸ்.ஐ. மனைவி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவிதமான தவறும் செய்யாத எனது அக்கா மற்றும் உறவினர் பெண் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விஸ்வரூபம்: தங்கள் மீது திருட்டு பழியை சுமத்திய எஸ்ஐ மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த புகார் மனுவில் கண்டக்டர் பெயரும் அடிபடுகிறது. திருட்டு பழியுடன், சாதீய ரீதியான புகாரும் கிளம்பியிருப்பதால், இந்த விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications