டெல்லிக்கு தேமுதிக போவது ஏன்... ?
சென்னை: தமிழகத்திலேயே இன்னும் ஸ்திரமான கடசியாக நிலை கொள்ள முடியாமல் தவித்து வரும் தேமுதிக டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஏன் போட்டியிட முடிவு செய்துள்ளது என்று ஆச்சரியக் கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் ஓட்டுக்களை மட்டுமே பிரிக்க முடிந்த தேமுதிகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
கூட்டணி அரசியலுக்குள் புகுந்த பிறகுதான் சற்று உயர்வு கிடைத்தது அக்கட்சிக்கு. இப்போது அதிமுகவும், தேமுதிகவை கூட்டணியிலிருந்து நீக்கி விட்ட நிலையில் புதிய கூட்டணிக்காக அலை பாய்ந்து கொண்டிருக்கும் தேமுதிக, டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது ஆச்சரியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

27ம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லி சட்டசபைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடப் போவதாக டெல்லி தேமுதிக மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். கட்சியி்ன் வேட்பாளர்களை 27ம் தேதி விஜயகாந்த் டெல்லியில் வைத்து அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜந்தர்மந்தரில் பொதுக்கூட்டம்
டெல்லி, ஜந்தர்மந்தரில் இதற்காக பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனராம். அதில் மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த்தும் கலந்து கொள்கிறார். அப்போது வேட்பாளர்கள் பெயரை விஜயகாந்த் அறிவிப்பாராம்.

டெல்லி தமிழர்களுக்கும் வியப்பு...
தேமுதிக டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பது டெல்லி வாழ் தமிழர்களுக்கே கூட ஆச்சரியமான செய்திதான்.

3 தொகுதிகளில் தமிழர்கள் அதிகம்
டெல்லியைப் பொறுத்தவரை ஜனக்புரி, ஆர்.கே.புரம், கரோல்பாக் ஆகிய தொகுதிகளில் கணிசமான தமிழர்கள் உள்ளனர். இவர்கள் காங்கிரஸுக்கோ அல்லது பாஜகவுக்கோதான் இதுகாலம் வரை வாக்களித்து வந்துள்ளனர்.

தேமுதிகவுக்கு வாக்களிப்பார்களா...
தற்போது தேமுதிக இங்கு போட்டியிட முடிவு செய்திருப்பதால் இவர்களில் எத்தனை பேரின் வாக்குகள் தேமுதிகவுக்குக் கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

போட்டிக்கான இலக்கு வேறு..
அதேசமயம், டெல்லியில் போட்டியிடுவது காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பரிவுப் பார்வையை தன் பக்கம் திருப்பும் முயற்சியாக கருதப்படுகிறது. இதை வைத்து தமிழக அளவில் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் பேரம் பேசி கூட்டணிக்குள் நுழைய விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் கணக்கு பலிக்குமா...
ஆனால் தேமுதிகவின் கணக்கு பலிக்குமா என்பதே பெரும் கேள்வி. காரணம், டெல்லியில் வைத்து போட்டியிட்டு மிரட்டிப் பார்த்துத்தான் பாஜக அல்லது காங்கிரஸை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்று இல்லை. உங்கள் கூட்டணிக்கு நான் வரத் தயார் என்று விஜயகாந்த் அறிவித்தாலே போதும், பேரத்தை சுமூகமாக முடித்து கூட்டணிக்குள் அவரை இழுக்க இரு கட்சிகளுமே தயாராகத்தான் உள்ளன.

தேசியக் கட்சியாக மாற முயற்சியா...
அதேசமயம், இன்னொரு கருத்தும் கிளப்பப்படுகிறது. அதாவது எப்படி அதிமுக, டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என வெளி மாநிலங்களிலும் போட்டியிட்டு தேசியக் கட்சி போல செயல்பட நினைக்கிறதோ அதேபோல தாங்களும் தேசிய அளவிலான கட்சியாக உருவெடுக்க டெல்லி தேர்தல் களத்தை விஜயகாந்த் பயன்படுத்த முனைகிறாரோ என்ற கருத்தும் எழுப்பப்படுகிறது. மேலும், டெல்லியில் போட்டியிடுவதன் மூலம் தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் பார்வையும் தங்கள் மீது படியும். இதை வைத்து தங்களுக்கு பெரும் பலனை தேடிக் கொள்ளலாம் என்ற கருத்தும் தேமுதகவிடம் இருப்பதாக யூகிக்கப்படுகிறது.

ஆனால் டெபாசிட் கிடைக்குமா...
ஏற்கனவே தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்தது தேமுதிக. வாக்குகளை மட்டுமே அதனால் பிரிக்க முடிந்தது. அதேபோல டெல்லியிலும் அதற்கு டெபாசிட் கிடைப்பது அரிதே என்றும் சொல்லப்படுகிறது.

முதலில் டெல்லி கூட்டணி.. பிறகு தமிழகத்தில்
அதேசமயம், தேமுதிகவின் கணக்கு ஒருவேளை இதுவாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதாவது டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அங்கு ஒரு வாக்கு வங்கியை ஏற்படுத்தி விட்டு பின்னர் தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணிக்கு அடி போடலாம் என்ற நினைப்பில் தேமுதிக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
கேப்டன் மனதில் என்ன இருக்கிறது என்பது பிரேமலதா விஜயகாந்த்துக்கே வெளிச்சம்.!












Click it and Unblock the Notifications