தஞ்சாவூர் தொகுதி தேர்தலை முன்வைத்து துரைக்கண்ணுவை அமைச்சராக்கிய ஜெ.?
சென்னை: தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதை யூகித்தே அந்த மாவட்டத்தில் கட்சியில் பெரிய செல்வாக்கு எதுவுமே இல்லாத பாபநாசம் எம்.எல்.ஏ. துரைக்கண்ணுவை அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரரான துரைக்கண்ணுவை அமைச்சராக்கியதன் மூலம் தஞ்சாவூர் தொகுதி வாக்காளர்களை கவர்ந்துவிடலாம் என்பதான் ஜெயலலிதாவின் வியூகம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை. எஞ்சிய 7 தொகுதிகளில் 4 இடங்களை திமுகவும் 3-ல் அதிமுகவும் வென்றன.
பாபநாசம், பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியவை அதிமுக வென்ற தொகுதிகள். இதில் பாபநாசம் துரைக்கண்ணுதான் அதிகபட்சமாக 24,365 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். பேராவூரணி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட கோவிந்தராஜன் 995 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். பட்டுக்கோட்டை சிவி சேகர் 12, 358 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இவர்கள் 3 பேரும் அந்த மாவட்ட மக்களிடமோ அல்லது கட்சியிலோ பெரிய அளவுக்கு பிரபலமானவர்களோ செல்வாக்கான நபர்களோ இல்லை. பாபநாசம் துரைக்கண்ணு 2006, 2011 தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர். இம்முறையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.
ஆனால் பரம சாது, அதிர்ந்து கூட பேசாதவர். அவரை ஜெயலலிதா அமைச்சராக்கியது அந்த தொகுதி மக்களுக்கே ஆச்சரியமாக உள்ளது.
அதேநேரத்தில் துரைக்கண்ணுவை அமைச்சராக்கியதன் பின்னணியில் ஜெயலலிதாவின் வியூகம் ஒன்றும் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும் திமுக மிகக் கடுமையான போட்டியைத்தான் கொடுத்திருக்கிறது. அதனால்தான் திமுக அணியால் 98 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கிறது.
விரைவில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியிலும் மிக மிக கடுமையான போட்டியை திமுக தரும். இதை சமாளிக்கும் வகையிலான ஒரு வியூகமாகவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரைக்கண்ணுவை வேளாண்துறை அமைச்சராக்கியிருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர். இது தஞ்சாவூர் தொகுதி வாக்காளர்களை கவரும் உத்தி என்கின்றனர்.












Click it and Unblock the Notifications