Target Madurai: மதுரையை மையம் கொண்ட 'அரசியல் புயல்'.. பெரும் தலைகளின் அடுத்தடுத்த விசிட் பின்னணி!?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை - தமிழக அரசியலின் மையக் களமாக மாறி இருக்கிறது. புதிதாக கட்சி தொடங்கிய விஜய் துவங்கி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை மதுரையை வரிசையாக சுற்றுப் போட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக இருக்கும் மதுரையைச் சுற்றி அரசியல் மேகங்கள் சூழத் தொடங்கியதற்கு பல்வேறு பின்னணிக் காரணங்கள் இருக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு பாஜக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Why Madurai Matters Decoding the Political Significance Behind Amit Shah s Visit

மதுரையை மிரள வைத்த விஜய்

'ஜனநாயகன்' திரைப்பட ஷூட்டிங்கிற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் கடந்த மே 2 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்த நடிகரும் தவெக தலைவருமான விஜய், அறிவிக்கப்படாத ரோடு ஷோவையே நடத்தினார். மதுரையில் விஜய்யின் வருகை காரணமாக பெருந்திரளான விஜய் ரசிகர்கள் கூடியது அரசியல் கட்சிகளை மிரள வைத்தது.

தமிழக வெற்றிக் கழக தொடக்க மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்தாலும், அதன் பிரதான கிளை மதுரையில் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்தச் சூழலில் விஜய்யின் மதுரை விசிட்டின்போது திரண்ட ரசிகர்கள் கூட்டத்தால், 2026 சட்டசபை தேர்தலில் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற யூகங்களும் எழுந்து அடங்கின.

மதுரையில் ஸ்டாலின்

கடந்த ஜூன் 1ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் திமுக பொதுக்குழு நடத்தப்பட்டது. பொதுக்குழுவிற்கு முதல் நாள் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வை மதுரை மாநகருக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் வழியே சுமார் 20 கி.மீ தொலைவுக்கு நடத்தினார்.

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுகவின் உறுதியான நிலைப்பாடு காரணமாக, மதுரை மக்களிடத்தில் திமுக கூடுதல் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இதனை மையப்படுத்தியே பொதுக்குழுவுக்கு மதுரையை முதல்வர் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி தென் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு

இந்நிலையில்தான் பாஜகவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்து முன்னணி, வரும் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த மே 28ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை அழைத்து பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆன்மீகம் சார்ந்த மாநாட்டை, தமிழகத்தில் அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக இது அமையும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.

மதுரையில் அமித் ஷா

இந்தச் சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பாஜக சார்பாக மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று மதுரை வந்திருக்கிறார். மதுரை புறவழிச்சாலையில் சிந்தாமணியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அவர், அங்கு பாஜக நிர்வாகிகளை மட்டுமன்றி, வேறு சில முக்கிய பிரமுகர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னணி என்ன?

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கிய பேராசிரியர் ராம.சீனிவாசன், அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நிலையிலேயே இரண்டாம் இடம் பெற்றார். தென் மாவட்டம், அதுவும் மதுரையில், அதிமுகவையே பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது அனைவரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது.

மதுரையில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகள், தமிழக பாஜகவுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் பாஜக ஆதரவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துகொண்ட பாஜக தலைமை, தென் மாவட்டங்களை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் பாஜகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்காகவே, நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டதும் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களுக்கு டார்கெட்

சமூக ரீதியாக ஓட்டுகளை மையப்படுத்தி பாஜக, இந்த முறையும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே மதுரையில் அமித் ஷா பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது என்கிறார்கள். இதற்கிடையே, தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியையும் அமித் ஷா மேற்கொள்கிறார்.

மதுரை வந்துள்ள அமித்ஷாவை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இப்படியாக தென் மாவட்டங்களில் பலவித கணக்குகளோடு அமித் ஷா களமிறங்கி உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இன்று அமித் ஷா ஆலோசனை

மதுரையில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை பாஜக நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தார்.

இன்று காலையில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் அமித் ஷா. இந்நிலையில் இன்று மாலை பெரிய அளவில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் அமித்ஷா பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+