மதுவிலக்கு... மனமிறங்காத ஜெ அரசு... என்ன செய்யப் போகின்றன எதிர்க்கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

-ஆர்.மணி

தமிழ் நாட்டில் மதுவிலக்கு அறவே சாத்தியமற்றது என்று தமிழக ஆட்சியாளர்கள் கைவிரித்து விட்டனர். செப்டம்பர் 25 ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு சம்மந்தமான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதலிலளித்துப் பேசிய இந்தத் துறைக்கான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இதனை தெளிவாகவே அறிவித்து விட்டார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று இந்த மானியக் கோரிக்கையில் அஇஅஇதிமுக வைத் தவிர்த்த அனைத்து உறுப்பினர்களும் பேசினர். மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி ஆணித்தரமாக இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.

Why oppositions keep mum in prohibition issue?

உறுப்பினர்களின் பேச்சுக்கு பதில் அளித்த நத்தம் விஸ்வநாதனின் பேச்சுத்தான் முக்கியமானது. ‘மதுவினால் ஏற்படும் தீமைகளை மற்றவர்களைவிட புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். ஆனால் மது விலக்கு என்பது அவ்வளவு சுலமானதல்ல. சங்க காலத்திலேயே மன்னரைப் புகழ்ந்து பாடிய பெண் புலவர்களுக்கு அரசர்கள் மதுவைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதற்கும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வேண்டுமானால் தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வருவது பற்றி நாம் யோசிக்கலாம். அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழ் நாட்டில் மட்டும் எப்படி மதுவிலக்கை கொண்டு வர முடியும்? உறுப்பினர் வேண்டுமானால் மது குடிப்பவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டு, குடிப்பதை நிறுத்தச் சொல்லலாம்.'

-இதுதான் நத்தம் விஸ்வநாதனின் 'பொறுப்பான' பதில். இதற்குப் பிறகு இந்தப் பிரச்சனை பற்றிப் பேச எதிர்கட்சிகளுக்கு வழக்கம் போலவே சட்ட மன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரிய பெரிய ஆர்பாட்டங்களை நடத்திய எதிர்கட்சிகள் இனி என்ன செய்யப் போகின்றன? ஜூலை 31 ம் தேதி சசி பெருமாள் மரணத்துக்குப் பின்பு சுமார் மூன்ற வாரங்கள் தமிழகத்தை அமளிக் காடாக்கி மதுவிலக்குக் கோரி எதிர்கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தின.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஹாரிங்டன் சாலையில் இருந்து டாஸ்மாக் மதுபானக் கடையை உடைத்தெறிந்தனர். மதுப் புட்டிகள் சூறையாடப் பட்டன. இதில் கைது செய்யப் பட்ட 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றரை மாதங்கள் புழல் சிறையில் இருந்தனர்.

தமிழக சட்டமன்றம் ஆகஸ்ட் 24 ம் தேதி கூடியது. இந்தக் கூட்டத் தொடரில் மதுவிலக்குக் கோரிக்கையை எதிர்கட்சிகள் எழுப்பி சட்டசபையை கதி கலங்க வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப் பட்டது. இரண்டு முறை மதுவிலக்குப் பற்றிப் பேசுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முயன்றன. ஆனால் சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுவும் இரண்டு நாட்களுக்குத்தான். பின்னர் இந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போனது.

சட்டமன்றத்தில் பேச விடாவிட்டால் என்ன? சட்டசபைக்கு வெளியே, விரிந்து பரந்த நிலப்பரப்பு இருக்கிறது. அதற்கு தமிழ் நாடு என்றே பெயர். சாலைகளில், வயல்வெளிகளில், பொது இடங்களில், தொழிற்சாலைகளில், விளையாட்டு மைதானங்களில் என்று பல தளங்களிலும் மது விலக்கு கோரி எதிர்கட்சிகளை போராட்டங்களை நடத்தியிருக்கலாம். ஆனால் அந்தோ பரிதாபம்.... சபாநாயகர் அனுமதி தரவில்லை என்ற பழைய பல்லவியை மட்டும் பாடிக்கொண்டு வாய் மூடி மெளனியாய், பெட்டிப் பாம்பாய் அடங்கி ஒடுங்கி இருந்து விட்டனர்.

சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு இந்த எதிர்கட்சிகள் எழுப்பிய கோஷங்களும், நடத்திய போராட்டங்களும், புஸ்வானாமாகிப் போனது. மாணவர்களை உசுப்பி விட்டு, அவர்களை புழல் சிறையில் ஒன்றரை மாதங்கள் தள்ளியது மட்டுமே மிஞ்சியது.

ஆளும் அஇஅதிமுக அரசு மதுக் கொள்கையில் தனது பதிலை சொல்ல வேண்டும் என்றே அனுதினமும் கூக்குரல் எழுப்பி வந்த எதிர்கட்சிகளுக்கு முகத்தில் அறைந்தாற் போல பதிலும் சொல்லப் பட்டுவிட்டது. ஆனால் நான்கு நாட்களாகியும் இதுவரையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரிதாகக் கூவி வந்த எதிர்கட்சிகளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

நெருங்கி வரும் தேர்தல்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ஐந்து கட்சி கூட்டணி கண்டிருக்கும் வைகோ, நத்தம் விஸ்வநாதனின் பதிலுக்கு எதிர் குரல் கொடுக்கவில்லை. இதிலுள்ள மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட ஆழமான மெளனத்தையே கடைப்பிடிக்கின்றன. திமுகவுடன் கூட்டணியில்லை என்பதில் இந்த ஐந்து கட்சி கூட்டணியில் உள்ளவர்கள் உறுதியாக உள்ளனர்.

அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக இதில் சிபிஎம் தவிர்த்த மற்ற கட்சிகள் ஏங்கிக் கிடப்பதே உண்மை. இது ஐந்து கட்சி கூட்டணியின் நிலைமை என்றால் தேமுதிக வும், திமுக வும் கூட ஜெயலலிதா அரசின் இந்த நிலைப்பாட்டுக்காக அரசை நிலைகுலைய வைக்கும் போராட்டங்களை நடத்தத் தயாராக இல்லை. அவர்களால் முடியவில்லை.
மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இந்தாண்டு 24,000 கோடி ரூபாய் என்கிறார் நத்தம் விஸ்வநாதன். இது வருமாண்டுகளில் பெருமளவு பெருகப் போவது உறுதி. பூரண மதுவிலக்கு இல்லையென்றாலும் - அது தேவையற்றதும் கூட - மதுவிற்பனையில் கடுமையான கட்டுப்பாட்டினை இந்த அரசு கொண்டு வரும் என்ற அற்ப நம்பிக்கை ஒரு சாராரிடம் இருந்தது.

ஆனால் இதற்கும் ஜெயலலிதா அரசு வேட்டு வைத்து விட்டது. புற்றீசல் போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது நிறுத்தப் படும். கடைகளின் எண்ணிக்கையும், வேலை நேரமும் கணிசமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் பூரண மதுவிலக்கை நோக்கிய பயணம் தொடங்கும் என்ற சொற்ப நம்பிக்கையும் முற்றிலும் அற்றுப் போய் விட்டது.

மதுவிலக்குக் கோரி போராடுபவர்கள் கூட தனிப்பட்ட முறையில் பேசும்போது தங்களது எதிர்பார்ப்பு அதுவல்ல என்கின்றனர். மதுவிற்பனையை கூச்ச, நாச்சமில்லாமல் செய்து கொண்டிருக்கும் அரசு, அதுவும் தரமற்ற மதுபான விற்பனையை வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓட விட்டுக் கொண்டிருக்கும் அரசு அதனை கட்டுப் படுத்தினாலே, அது முதற்படியாக அமையும் என்கின்றனர். தற்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு அதிர்ச்சியானது மட்டுமல்ல, மாறாக மனிதாபானமற்றதாகவும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததாகவும் இருக்கிறது.

இதில் ஒரு விஷயம் சற்றே ஆச்சரியமானதாக இருக்கிறது. 2011 ல் பதவிக்கு வந்ததில் இருந்து வெகுஜன மக்கள் உணர்வுகளோடு சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையுமே - இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை, இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பது, இலங்கை விளையாட்டு வீரர்களை சென்னையிலிருந்து திருப்பியனுப்புவது, கூடங்குளம் அணு உலை விவகாரம், கெய்ல் குழாய் பதிப்பு, மீத்தேன் எரிவாயு விவகாரம், ராஜீவ் கொலையாளிகள் விடுதலை, ஜல்லிக்கட்டுக்கு தடை, முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரம், டேம் 999 படத்துக்குத் தடை -போன்ற பல விவகாரங்களில் வெகு ஜன மக்களின் கருத்தோட்டத்துடனும் அல்லது வெகுஜன கருத்தோட்டத்தோடு இணைந்தது என்று தான் கருதும் விஷயங்களிலும் ஜெயலலிதா கவர்ச்சிகரமான முடிவுகளையே எடுத்து வந்திருக்கிறார்.

அதுபோலவே மதுவிலக்கிலும் ஜெயலலிதா மக்கள் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டவாறே முடிவு செய்வார் என்ற பரவலான கருத்து நிலவி வந்தது. ஆனால் நிலைமை வேறு விதமாகத் திரும்பியிருக்கிறது. மதுவிலக்கு விஷயத்தில் ஜெயலலிதா உடும்புப் பிடியாகவே இருக்கிறார். இந்த நிர்தாட்சண்யமற்றப் போக்கு கடைசி வரையில் அதாவது தேர்தல் வரையில் தொடருமா என்று தெரியவில்லை.

கடைசி நேரத்தில் மது விலக்குப் பற்றி ஏதாவது ஒரு நிலைப்பாட்டை, அதாவது மதுவிலக்கிற்கு சாதகமான நிலைப்பாட்டை அவர் எடுக்கலாம். ஆனால் அப்போது காலங் கடந்திருக்கும். இன்று தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் மதுவிலக்கு வேண்டும் என்று கோரி வரும் நிலையில், பெண்களின் வாக்குகளை தனது மைய ஆதாரமாகக் கொண்டிருக்கும் அஇஅதிமுக அதற்கு சற்றே எதிராகவும், மதுவிலக்கு கிடையாதென்று ஆணவமாகவும் சொல்லுவது சற்றே அதீத நம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது - நாங்கள்தான் அடுத்த முறையும் ஆட்சிக்கு வரப்போகிறோம், யார் எந்த அணியில் இருந்தாலும்- என்ற இறுமாப்பில் விளைந்ததாக இருக்கிறது.

இப்படி ஒரு தலைவியை, ஆளும்கட்சியை எதிர்கட்சிகள் எப்படி எதிர்க்கப் போகின்றன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி? இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட தமிழகத்தை கிடு, கிடு க்க வைத்த எதிர்கட்சிகள் தற்போது மெளனம் காத்து, தேர்தல் வரையில் காத்திருக்க போகிறன்னரா அல்லது மீண்டும் போரட்டக் களத்தில் இறங்கப் போகின்றனரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+