மைத்ரேயன் கருத்தை முதல்வரும், துணை முதல்வரும் மறுக்காதது ஏன்... அப்படீன்னா??
அதிமுகவில் நிலவும் கருத்து வேறுபாடு குறித்து மைத்ரேயன் கருத்துக்கு இதுவரை முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக அணி இணைப்பு குறித்து மாறுப்பட்ட கருத்து கூறிய மைத்ரேயனின் கருத்துக்கு இதுவரை முதல்வரும், துணை முதல்வரும் மௌனம் சாதித்து வருவதை பார்க்கும் போது மைத்ரேயன் கூறியது சரிதானோ என்று தொண்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, சசிகலாவின் பதவி ஆசையால் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் இணைவது என்று முடிவு செய்து இரு நிபந்தனைகளை செயல்படுத்திவிட்டு எடப்பாடி அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் இணைந்தனர்.

மாஃபாவுக்கு அமைச்சர் பதவி
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஓபிஎஸ் அதிருப்தி
இந்நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் முக்கியத்துவம் அளிக்காத சூழல் நிலவுகிறது என்றும் துணை முதல்வர் பதவி இருந்தாலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றும் தனக்கென கட்சியிலும் எந்த அதிகாரமும் இல்லை என்று ஓபிஎஸ் மனம் வருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை நிவாரண பணிகளிலும் தங்கள் அணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாறுபட்ட மைத்ரேயன்
இந்நிலையில் 3 மாதங்களாக அதிமுக அணிக்குள் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த நெருப்பை தற்போது மைத்ரேயன் எம்.பி. வெளியே கொண்டு வந்துள்ளார். அவர் நேற்று முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் மனங்கள்.... என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒற்றுமையாக செயல்படுகிறோம்
மைத்ரேயனின் பதிவு குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையனும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

மௌனம் காக்கின்றனர்
மைத்ரேயனை தவிர மற்ற யாரும் இதுபோன்ற கருத்துகளை கூறவில்லை. மேலும் இது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் ஒட்டுமொத்த தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் தெரிவித்துள்ள நிலையில் உண்மை நிலையை முதல்வரும், துணை முதல்வரும் விளக்க முன் வராதது ஏன்.

மைத்ரேயன் கூறியது நிஜமோ?
மைத்ரேயனின் கருத்து குறித்து முதல்வரும், துணை முதல்வரும் மௌனமாக இருப்பதை பார்க்கும் போது அவர் கூறிய கருத்தை உண்மை என்று எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் தொண்டர்களிடையே உள்ளது. இரட்டை குழல் துப்பாக்கிகள் என்றெல்லாம் எடப்பாடி கூறியிருந்த நிலையில் தற்போது மௌனம் காப்பது தொண்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வெயிட்டிங்
ஒரு வேளை மௌனம் காத்துக் கொண்டு இரட்டை இலை தீர்ப்பின் போக்கை வைத்து தங்களுக்கு உள்ள மோதல் போக்கை வெளிக் கொண்டு வரலாம் என்ற திட்டத்தில் உள்ளனரோ? என்ற சந்தேகமும் நிலவுகிறது. அப்போ மீண்டும் லாரி லாரியா பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தை திக்குமுக்காட வைக்குமோ?












Click it and Unblock the Notifications