விடுமுறையன்று இயங்கிய பட்டாசு ஆலை.. விருதுநகர் வெடி விபத்தில் 21 பேர் பலி.. என்ன நடந்தது?
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று பணிகள் நடந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இது அப்பகுதியில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்த உடன் சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 அறைகளும் தீக்கிரையாகின.
இந்த நிலையில் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், சுமார் 10 கிமீ தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழலில், விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் உடல் கருகிய நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை நேரில் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக பட்டாசு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இன்று திடீரென வேலை நாளாக கூறப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications