தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி? வந்து விழுந்த கேள்வி! ஒரே வரியில் நயினார் நாகேந்திரன் நறுக் பதில்
தூத்துக்குடி: அதிமுக பாஜக கூட்டணியை அமைத்துள்ள நிலையில், 2026 தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பதில் கவனத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசியல் ரீதியாக ஒரு வாரத்தில் இரு முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளது. ஒன்று தமிழக பாஜக தலைவராக அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தேர்வாகியிருக்கிறார். அதேபோல நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வந்த 2026 தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகியிருக்கிறது.

அதேநேரம் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்தச் சூழலில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "அதிமுக பாஜக கூட்டணி உறுதியாவதில் நீண்ட இழுபறி இருந்ததாக எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இல்லை. அமித் ஷா சென்னை வந்திருந்தார். அப்போது தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அன்றைய தினமே கூட்டணி உறுதியானது. பிரஸ் மீட்டை வைத்து கூட்டணியை அறிவித்துவிட்டோம். எனவே, நீண்ட இழுபறி என்பதில் உண்மை இல்லை.
கூட்டணி அரசு அமையுமா?
கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம். அதேநேரம் ஆட்சியில் பங்கு கேட்போமா என்பது குறித்து இப்போது பேச முடியாது. 2026ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்றும் அந்தக் கூட்டணியில் அதில் அதிமுக இருக்கும் என்றும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அதையே தான் நானும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.
அடுத்த தேர்தலில் மீண்டும் நெல்லையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார். மேலும், தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளை எப்போது தொடங்குவீர்கள் என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என்று மட்டும் பதிலளித்தார்.
பெண்கள் வாக்கு
தொடர்ந்து பேசிய அவர், "ஜெயலலிதா ஒவ்வொரு வீட்டிற்கும் மிக்ஸி, கிரைண்டர், பேன், தாலிக்குத் தங்கம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார். முதல் பட்டதாரிகளுக்குக் கூட சலுகை கொடுத்தார். ஆனாலும் 2006ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஒரு வாக்குறுதி அது குறிப்பிட்ட ஒரு தேர்தலில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே நிச்சயம் மக்கள் வாக்களிப்பார்கள்.
திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி. திமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொன்முடி பேசியது மிக மோசமான பேச்சு. அப்படி இருந்தபோதிலும் முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். எல்லாவற்றுக்கும் தமிழக மக்கள் 2026ல் பதில் சொல்வார்கள். இனியும் இதுபோல ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அஞ்சுகிறார்" என்றார்.
போக்குவரத்துக் கழகம்
போக்குவரத்துக் கழகம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "பொதுவாக அரசு எந்தவொரு தொழிலும் செய்யக்கூடாது. ஆனால், இது மக்கள் சேவை என்பதால் செய்து தான் ஆக வேண்டும். இதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை ஏற்று போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசுதான் அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதுவே அரசின் கடமை. ஆனால், அதை அரசு செய்வதில். அது நிர்வாக கோளாறு தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications