பாமக வராவிட்டால் அதற்குரிய இடங்களில் பாதியை அழகிரிக்குக் கொடுக்க பாஜக திட்டம்?
சென்னை: ஒரு வேளை கூட்டணியிலிருந்து பாமக விலகும் நிலை ஏற்பட்டால் அதற்குப் பதில் மு.க.அழகிரியை உள்ளே இழுத்து அவருக்கு சில இடங்களைக் கொடுத்து கூட்டணியின் பலத்தை நிலை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
பாஜகவுக்கு முற்றிலும் சாதகமாக மாறியுள்ள அழகிரியை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்து வருகிறதாம் பாஜக மேலிடம்.
அழகிரியால் நிறைய சாதகங்கள் இருக்கின்றன என்பதால் அவரை வைத்து தென் மாவட்டங்களில் கணிசமான ஆதாயத்தை தேடிக் கொள்ளவும் அது தீவிரமாக உள்ளதாக தெரிகிறது.

பண பலம் - ஆள் பலம்
அழகிரியைப் பொறுத்தமட்டில் ஆள் பலத்திற்குப் பஞ்சமே இல்லை. அதேசமயம், அவருக்காக கொட்டிச் செலவு பண்ணவும் ஆட்கள் உள்ளனர்.

செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் அழகிரி
அழகிரியின் தற்போதைய ஒரே எண்ணம் மற்றும் நோக்கம், தான் இல்லாமல் தென் தமிழகத்தில் திமுக இல்லை என்பதை நிரூபிப்பது மட்டுமே. மற்றபடி அவர் திமுகவை அழிக்கும் நோக்கிலோ அல்லது கருணாநிதிக்கு எதிராகவோ செயல்பட மாட்டார், தனது ஆதரவாளர்களையும் செயல்பட விட மாட்டார் என்கிறார்கள்.

செல்வாக்கை நிரூபித்து திமுகவைக் கைப்பற்ற திட்டம்
தனது செல்வாக்கை பொட்டில் அடித்தாற் போல நிரூபித்த பின்னர் அதை வைத்து திமுகவை ஸ்டாலினிடமிருந்து கைப்பற்றுவதே அழகிரியின் மனக் கணக்கு என்றும் சொல்கிறார்கள்.

கிடைத்தவரைக்கும் லாபம்தானே
அதேசமயம், பாஜகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எப்படியாவது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதே. 2 சீட்கள் கிடைத்தால் கூட அதற்கு அது பெரிய வெற்றிதான். எனவேதான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அழகிரியை நண்பனாக்கி ஆதாயம் தேட முயல்கிறது பாஜக. அழகிரிக்கும் தனியாக சண்டை போடுவதற்குப் பதில் துணைக்கு ஒருவரை கூட்டுச் சேர்த்துக் கொண்டது போலாயிற்று.

பாமகவால் படு தலைவலி
தற்போது கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிகவால் படு தலைவலியைச் சந்தித்து வருகிறது பாஜக. எனவே இந்த நேரத்தில் தொண்டர் படை பலத்துடன் கூடிய அழகிரியை வைத்துக் கொண்டால் தென் மாவட்டங்களில் நிலையை சரிக்கட்ட முடியும் என்று அது கருதுகிறது.

பாமக போனால் கவலையில்லை
எனவேதான் அது தற்போது வித்தியாசமான முடிவுக்கு வந்துள்ளதாம். பாமக கூட்டியை விட்டு போக முடிவு செய்தால் அதை அனுமதி்ப்பது என்றும், அதற்கு மாற்றாக அழகிரியை கூட்டுச் சேர்த்துக் கொள்வது என்றும் அது தீர்மானித்துள்ளதாம்.

பாமக இடங்களில் சில அழகிரிக்கு
பாமக வெளியேறும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஒதுக்கிய 8 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப் போகிறது பாஜக. அப்படித் தரும்போது சிலவற்றை அழகிரிக்காகவும் ஒதுக்க அது தயாராக உள்ளதாம். அழகிரி தனது ஆதரவாளர்களை அங்கு நிறுத்தலாம் அல்லது அவர் மறுத்தால், தானே போட்டியிட்டு அழகிரியின் ஆதரவுடன் அங்கு வெல்ல முயற்சிப்பது என்பதே பாஜகவின் திட்டம் என்கிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் கை கொடுப்பார்கள்
தற்போது ரஜினி ரசிகர்களும் அழகிரி பக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மதுரை மாவட்ட தலைவர் பால தம்புராஜ், அழகிரியின் தீவிர விசுவாசி ஆவார். ரஜினிக்கும், அழகிரிக்கும் இடையே உள்ள நல்ல நட்பு காரணமாக மதுரையில் எப்போதுமே ரஜினி ரசிகர்கள் அழகிரி பக்கம்தான் இருப்பார்கள். எனவே அதுவும் கூட தனக்கு சாதகமானதாக அமையும் என்று பாஜக கணக்குப் போடுகிறதாம்.
எப்படிப் பார்த்தாலும் அழகிரியால் ஏதாவது ஒரு ஆதாயம் கிடைப்பது உறுதி என்று பாஜக கருதுவதால் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுகிறதாம்.












Click it and Unblock the Notifications