ஆர்கே நகரில் மாறிய அரசியல்... சண்டைக்காரர் தினகரனுடன் கைகுலுக்குமா பாஜக?
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளை பொறுத்து பாஜக தனது அதரவு நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி தினகரனுடன் அணி சேருமா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, தினகரன் இடையே நடந்த சண்டையில் தினகரனே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இனியும் அதிமுகவை நம்பியே பாஜக இருக்குமா அல்லது தினகரனுடன் கைகோர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுகவின் கீழ் ஆட்சியை கைப்பற்ற பாஜக நினைக்கிறது என்பது தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. இதற்கு ஏற்றாற் போல சசிகலா சிறை சென்ற பின்னர் அதிமுகவில் நடந்த எல்லா விஷயங்களுமே பிரதமர் மோடியின் கண்பார்வையில் நடந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
அதிமுக பிளவுபட்ட போதும் சரி, ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியிடையே சமாதாக பேச்சு நடந்தது என எல்லாமே டெல்லி மேலிடப் பார்வையிலேயே நடந்தது. இதற்காக முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் அடிக்கடி டெல்லிக்குப் பயணமாகினர். கடைசியாக இரு அணிகள் இணைந்த கையோடு குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவிற்கு இருவரும் டெல்லிக்கு பயணமானார்கள், அதன் பின்னர் டெல்லிக்கும் தமிழக அரசுக்குமான தொடர்பு என்பது கடிதம் எழுதுவது அறிக்கை விடுவது என்ற அளவில் தான் இருக்கிறது.

முதல்வரி, பாஜக உறவு
கன்னியாகுமரியை ஓகி புயல் புரட்டிப் போட்ட போது இந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாரே தவிர முதல்வர் டெல்லி செல்லவில்லை. அண்டை மாநிலமான கேரள முதல்வர் டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்து நிதியுதவி கோரி வந்தார்.

பாஜகவிடம் சப்போர்ட் குறைகிறதா?
கன்னியாகுமரி வந்த பிரதமரை சந்தித்தே தமிழக முதல்வர் நிவாரணத் தொகை கோரினார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பிற்குப் பிறகு பெரிய அளவிலான அரசியல் சப்போர்ட் பாஜகவிடம் இருந்து அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. ஆர்கே நகர் தேர்தலில் பாஜக போட்டியிடாது அதிமுக வேட்பாளரை ஆதரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

சசி குடும்பத்தை ஒதுக்கி வைத்த பாஜக
இதே போன்று தினகரன் தலைமையில் அதிமுக உருவெடுத்தால் பின்னர் பாஜக காலூன்ற முடியாதே என்ற காரணத்தாலும் சசிகலா குடும்பத்தை பாஜக அடக்கி வைத்ததாக சொல்லப்பட்டது. அதன் காரணமாகவே தினகரன் மீது வழக்கு, சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு என அடுத்தடுத்து அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டன.

திருப்பம்
இந்நிலையில் நடந்த முடிந்துள்ள ஆர்கே நகர் தேர்தல் முடிவானது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் செல்வாக்கு தினகரனுக்குத் தான் ஓ.பிஎஸ், ஈபிஎஸ்க்கு இல்லை என்றும் தெளிவாகியுள்ளது. எனினும் இந்த ஒரு தொகுதியை வைத்து தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

தினகரனுடன் கைகுலுக்குமா பாஜக
எனவே இனியும் அதிமுக முதுகிலேயே பாஜக சவாரி செய்யுமா. அல்லது அவர்களை கைகழுவிவிட்டு தினகரன் பக்கம் தனது ஆதரவுப் பார்வையை திருப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications