பிரச்சார கூட்டம்: மக்களுக்காக ஷாமியானா பந்தல் போடுவாரா ஜெயலலிதா?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டங்களில் தொண்டர்களின் நலன் கருதி ஷாமியானா பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சம்பந்தபட்ட தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்துவிட்டு சென்னை திரும்புகின்றார் ஜெயலலிதா.

ஆனால் இதுவரை ஜெயலலிதா பிரச்சாரம் பெரும்பாலும் மதிய நேரத்தை ஒட்டியே நடைபெற்றுள்ளது. அப்போது மேடை எதிரே பொது மக்கள் கடும் வெயிலில் அவரது பேச்சை மிகுந்த ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவை காணும் ஆசையிலும், அவரது பேச்சை கேட்கும் ஆசையிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வருவதால், அவர்கள் நலன் கருதி சௌகரியமாக பந்தல் அல்லது ஷாமியானா பந்தல் அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
மேலும், ஜெயலலிதா மக்களை வெயிலில் நிற்க வைத்து தான் மட்டும் நிழலில் பிரச்சாரம் செய்வது பற்றி எதிர்க்கட்சியை சேர்ந்த பல முக்கியத் தலைவர்களும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications