சென்னையில் மீண்டும் ஒரு பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை – காதலால் வந்த வினை
சென்னை: சென்னையில் மீண்டும் ஒரு சாப்ட்வேர் பெண் என்ஜீனியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே போல சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி என்பவர் வட மாநில கட்டட தொழிலாளர்களால் பாலியல் வன்முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கின் ஈரம் கூட காயாத நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந் நிலையில் சென்னை பெருங்குடி ரயில்நிலையம் அருகே சாப்ட்வேர் பெண் என்ஜீனியர் வைஷியா என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக வெங்கடாஜலபதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெருங்குடி ரயில் நிலையம் அருகே தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பொறியாளர் வைஷியாவை, அவருடன் பணியாற்றி வந்த வெங்கடாஜலபதி குத்திக் கொலை செய்துள்ளார்.
மேலும் வெங்கடாஜலபதியும் தன்னைத் தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வைஷியா மன்னார்குடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஞானசேகரன். வைஷியா வேளச்சேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில் திருப்பூரைச் சேர்ந்த வெங்கடாஜலபதியும் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வைஷியா பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள ஷேஷாத்திரிபுரத்தில் சென்று கொண்டிருந்தார். வைஷியாவை தொடர்ந்து வந்த வெங்கடாஜலபதி அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென, மறைத்து வைத்திருந்த கத்தியால் வைஷியாவை குத்தினார் வெங்கடாஜலபதி. பிறகு வெங்கடாஜலபதி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டார்.
தகவல் அறிந்து வேளச்சேரி போலீசார் விரைந்து வந்து இரண்டு பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கால் வைஷியா இறந்து போனார். ஆபத்தான நிலையில் வெங்கடாஜலபதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளளனர். திடீரென அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கொலை நடந்ததாக வேளச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications