சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாகிறது
நெல்லை: இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்துக்கே ஓலைச்சுவடிகள் அதிகமாக உள்ளதாக, திருநெல்வேலியில் நடைபெற்ற ஓலைச்சுவடிகளை வாசிக்கும் முறைகள் குறித்த பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது. சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை பாதுகாக்க இனி அனைத்தும் டிஜிட்டல் மயம் செய்யப்படும் என்றும் பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மருத்துவ ஓலைச்சுவடிகளை வாசிக்கும் முறைகள் குறித்த மூன்று நாள் பயிலரங்கு திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பயிலரங்கைத் தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் சித்த மருத்துவம் இந்திய மருத்துவத்தின் பல அரிய கருத்துகளை நமது முன்னோர் பல ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளை பாதுகாதது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தற்போது நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. எனவே ஓலை சுவடிகளை மின்னனு முறைக்கு மாற்றும் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது. ஓலை சுவடிகளை படித்து கற்று கொடுப்பதன் மூலம் மருத்துவத்தின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இந்தப் பயிலரங்கின்போது மின்னணு முறையில் பாதுகாக்க தன்னிடம் இருந்த பழைமையான ஓலைச்சுவடிகளை வழங்கிய தச்சநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ஓலைச்சுவடிகளும், மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்டதற்கான குறுந்தகடையும் ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.
இந்த ஓலைச்சுவடிகளில் அகஸ்த்தியர் குணவடம் என்ற பகுதியில் 850 உலக மருத்துவ குணங்கள் சொல்லப்பட்டுள்ளன. நாடி பரிட்சை தொடர்பான 12 நூல்கள், பாவ பிரகாச நிகண்டு ஆகியவை கிடைத்துள்ளன. படிப்படியாக அனைத்து ஓலை சுவடிகளும் இனி டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முகாமில் பராம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் திருநாராயணன் பேசும் போது, முதல் கட்டமாக 356 ஓலைச்சுவடிகள் மின்னணு மயமாக்கப்பட்டு மத்திய அரசின் ஆயுஸ் துறையிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த கட்டமாக பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் பிரெஞ்ச் நிறுவனம் சார்பில் அழிந்து போகும் நிலையில் உள்ள பராம்பரிய ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் வகையில் 170 ஓலைச்சுவடி கட்டுகள் மின்னணு மயமாக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதையும் தாண்டி தனிநபர்களின் வசமும் பல ஓலைச்சுவடிகள், மருத்துவக் குறிப்புகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன.
அவற்றை மின்னணு முறையில் பாதுகாக்கும் வகையில் எங்களது நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக மத்திய அரசுடன் சேர்ந்து 356 ஓலைச்சுவடிகள் மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. தென்தமிழக பகுதிகளில் கிடைத்த ஓலைச்சுவடிகள் அதிகளவில் பாதுகாக்கப்பட்டன.
2ஆம் கட்டமாக பிரிட்டிஷ் நூலகத்துடன் இணைந்து தென்தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிநபர்களிடம் இருந்த 170 ஓலைச்சுவடிகள் மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை அந்த நூலகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்.
1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச்சுவடிகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றில் சித்த மருத்துவத்துக்கே அதிக ஓலைச்சுவடிகள் உள்ளன. தமிழக ஓலைச்சுவடிகளில் ஏராளமான மருத்துவக் குறிப்புகள் பொதிந்து கிடக்கின்றன.
அகத்தியர் குணவாகனம் என்ற நூலில் சுமார் 850 அரிய மருத்துவத் தகவல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை படித்தறிந்துப் பிறருக்குத் தெரிவிக்க மாணவர் சமுதாயத்தால் மட்டுமே முடியும். அதற்காக இதுபோன்ற பயிலரங்குகளை நடத்தி வருகிறோம். ஓலைச்சுவடிகளைப் படிக்க தமிழ் மட்டுமன்றி தமிழ் இலக்கணமும் முழுமையாக கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். அதேபோல குறியீடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஓலைச்சுவடிகளை மின்னணு முறையில் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை பாதுகாக்கப்படாத ஓலைச்சுவடிகள் குறித்த தகவல்கள் இருந்தால் அதுகுறித்து பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றிடம் தெரிவித்தால் தகவல்களைச் சேமித்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றார் திருநாராயணன்.












Click it and Unblock the Notifications