கன மழை: வெள்ளத்தில் மிதக்கும் ஈரோடு... வீதிகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்த மக்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. தங்களது உடைமைகளை பறிகொடுத்த பொதுமக்கள் வீதிகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி வருகிறது.
Heavy Rain in ErodePlace KallukadaimefuPhoto : Vivek Natrajan
Posted by நம்ம ஈரோடு (Our Erode) on Wednesday, November 4, 2015
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் திடீரென மேக கூட்டங்கள் சூழ்ந்தது. இரவு 7 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.
மூலப்பாளையம் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடை பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீட்டுக்குள் இருந்தவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரி காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை காப்பாற்றி கயிறு மூலம் மீட்டு கொண்டு வந்தனர்.
ஈரோடு நாடார் மேடு, கொல்லம் பாளையம் ஆகிய பகுதிகளில் ஓடும் ஓடையிலும் தண்ணீர் நிரம்பி வழிந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த ஓடையில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான பாம்புகள், பாம்பு குட்டிகள் மற்றும் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் நாடார் மேடு, கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடிய- விடிய தூங்காமல் அவற்றை அகற்றிக்கொண்டே இருந்தனர்.
கொல்லம்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் 4 வீடுகள் இடிந்து விழுந்ததன.இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
ஈரோடு மரப்பாலத்தில் காரை வாய்க்கால் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் பின்புறம் உள்ள பொது தடுப்பு சுவர் 30 அடிநீளம் இடிந்து விழுந்தது. இதனால் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்தவ ஆலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆலயம் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கார்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்புடன் மீட்டனர்.
ஈரோடு மரப்பாலம்- கள்ளுக்கடை மேடு இடையே கட்டப்பட்டிருந்த புதுப்பாலத்துக்கு மேல் 5 அடி உயரத்துக்கு மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஈரோடு நகரின் மிக முக்கிய பகுதியாக விளங்கும் ஸ்டோனி பிரிட்ஜ் ஓடையில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து போல் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த ஓடையின் இருபுறமும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பாதுகாப்புக்காக முன் எச்சரிக்கையாக 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வந்து ரோட்டிலும் வீதியிலும் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் சூளை எம்.ஜி.ஆர். நகரில் 50 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அவர்களும் வெளியே ஓடிவந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஈரோட்டில் விடிய- விடிய பெய்த மழை, ஓரே நாளில் ஈரோடு நகரையே புரட்டி போட்டுள்ளது. இதுவரை வரை உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள்- உடமைகள் யாவையும் இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.
வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து இருப்பதால் வீட்டுக்குள் போக முடியாமல் பொதுமக்கள் வீதிகளிலேயே தங்கி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
