2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லைதான்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலுமே திமுக வென்றாலும் ஆச்சரியமில்லைதான் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ. வேலு இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கழக சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நம்முடைய அருமை சகோதரர் வேலு - சுசிலா தம்பதியரின் அருமை மகள் அனுஷா அவர்களுக்கும், ரங்கராஜன் - லதா தம்பதியரின் அருமை மகன் தருண் தன்ராஜ் அவர்களுக்கும், நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

கழகம் எனும் குடும்பம்
இந்த கழகத்தை அண்ணா அவர்கள் உருவாக்கிய நேரத்தில் குடும்ப பாச உணர்வோடுதான் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். ஆகவே, வாழ்த்தியவர்களும், வாழ்த்த வந்திருக்கக்கூடியவர்களும் அதே உணர்வோடுதான் குடும்ப பாச உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வருகைத்தந்து மணமக்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
நான் பேச நினைத்ததை எல்லாம் பேசிய உதயநிதி
வரவேற்புரையாற்றிய தம்பி. உதயநிதி அவர்கள் பேசுகின்ற பொழுது, நான் என்ன பேசவேண்டும் என்று நினைத்து வந்தேனோ... அதை அவர் பேசிவிட்டார். ஏன் என்றால், அவர் என்னுடைய மகன் ஆச்சே..... அவர் மட்டுமல்ல. நான் மட்டுமல்ல. எங்கள் குடும்பமே நம்முடைய மயிலை வேலுக்கு தான் ஓட்டு போட்டு இருக்கிறோம். நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நான் நிறைவாக காவல் துறை மானியக் கோரிக்கையில் பதிலளித்துப் பேசும்பொழுது தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும்போது, தமிழ்நாடு ஏற்கெனவே எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது, வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டு சொல்வதற்காக ஒரு உதாரணத்தை சொன்னேன். ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு கம்பீரமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.
தானாக மாட்டிக் கொண்ட அதிமுக
அதற்கு, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் உதயகுமார் அவர்கள் நான் பேசி முடித்தபோது, அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. நான் பேசியது அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. பிரபலமாக இந்த செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். நான் பேசி முடித்ததற்குப் பிறகு எழுந்து சபாநாயகரைப் பார்த்து முதலமைச்சர் சிறப்பாக பேசினார். தெளிவாகப் பேசினார். அழகாகப் பேசினார்.
தவழ்ந்து தவழ்ந்து படிப்படியாக முன்னேறிய எடப்பாடி
ஆனால், இடையில் "ஊர்ந்து வந்து" என்பதை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார். நான் உடனே கேட்டேன். ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். குழந்தைகள் தவழ்ந்து வருவது தவறா? என்று சொன்னேன். ஏற்கனவே, எஸ்டிபிஐ மாநாட்டில் இதே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரின் புகழைப் பற்றி பேசுகின்றபோது, அவர் எப்படியெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பதற்கு அவரே பேசியிருக்கிறார். நான் தவழ்ந்து, தவழ்ந்து, தவழ்ந்து படிப்படியாக வந்து முதலமைச்சராக வந்திருக்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. நான் நேற்றுதான் பார்த்தேன். முன்பே பார்த்து இருந்தால் சட்டமன்றத்தில் சொல்லியிருப்பேன்.
சட்டசபையில் தந்த பதிலடி
எதற்காக சொல்கிறேன் என்றால், அப்போது கூட கேட்டேன். திரு. உதயகுமார் அவர்கள் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, விடாமல் "தவழ்ந்து" என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள்.... வேண்டாம்... என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சொன்னேன். அது Unparliament Word கிடையாது. யாரையாவது குறிப்பிட்டு நான் பேசியிருப்பதாக நீங்கள் கருதினால், யார் என்று சொல்லுங்கள். நான் எடுத்துவிடுகிறேன். அதற்கு நானே சிபாரிசு செய்கிறேன் என்று சொன்னேன். உட்கார்ந்துவிட்டார். இதுதான் நடந்தது.
234 தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியமில்லை
தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லியிருக்கிறோமோ... அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்பட்டு நான் உறுதியோடு சொல்கிறேன் 2026-ஆம் ஆண்டு - இங்கு கூட பேசுகின்றபோது சிலர் சொன்னார்கள். திரு. கண்ணப்பன் அவர்கள் தான் பேசுகின்றபோது சொன்னார். 200 அல்ல 220 வரும் என்று அவர் சொன்னார். அதில் என்ன கஞ்சம் 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை.
மக்களின் வரவேற்பில் மெய் சிலிர்ப்பு
ஏன் என்றால், செல்லும் இடங்களிலெல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கின்றபோது நான் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பார்க்கும்போது உள்ளபடியே மெய் சிலிர்த்துப்போகிறேன். ஆகவே, நிச்சயமாக, உறுதியாக நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி - எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் நாம் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது வருமானவரித் துறையாக இருந்தாலும் சரி அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி - சி.பி.ஐ. வைத்து மிரட்டக்கூடியதாக இருந்தாலும் சரி - ED என்ற அந்த துறையாக இருந்தாலும் சரி இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் - ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக்கூடியவர்கள் நாம்.
தலைவர் கலைஞர் அவர்கள் 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்துகின்றபோது அதை எதிர்த்து இந்தியாவில் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நேரத்தில் டெல்லியிலிருந்து இரண்டு தூதுவர்கள் வந்தார்கள். கோபாலபுரத்திற்கு வந்தார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருக்க வேண்டும். உங்கள் ஆட்சிக்கு சில நாட்கள்தான் இருக்கிறது. சில மாதங்கள்தான் இருக்கிறது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் சில மாதங்கள் இல்லை. பல மாதங்கள் நீங்கள் ஆட்சியில் இருக்கலாம். ஆகவே, நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் போதும் என்று சொல்கின்றபோது, கலைஞர் சொன்னார். ஆட்சி அல்ல. எங்கள் உயிரே போனாலும் நாங்கள் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்க மாட்டோம் - ஜனநாயகத்தைப் காப்போம் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அனுப்பிவைத்துவிட்டு அடுத்துநாளே சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தில் நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட்டார்.
7-வது முறையாக மீண்டும் திமுக ஆட்சிதான்
சிறைப்பிடித்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தியாவில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நெருக்கடி நிலையை இரத்து செய்ய வேண்டும். எமர்ஜன்சியை இரத்து செய்ய வேண்டும் என்று அன்றைக்கு தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட அடுத்த விநாடியே நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. அதைப்பற்றி கவலைப்படவில்லை. நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 6-வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்களெல்லாம் ஆட்சியை உருவாக்கித்தந்து இருக்கிறீர்கள். 7-வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு.
தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்
அதே நேரத்தில், மணமக்களை மட்டுமல்ல. வேலு அவர்களையும் சேர்த்து கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். காரணம் அவரது மகளுக்கு அனுஷா என்று பெயரை சூட்டியிருக்கிறார். அது தமிழ் பெயர் அல்ல. ஆனால், மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள் என்பது மட்டும் எடுத்துச் சொல்லி, புரட்சிக் கவிஞர், பாவேந்தர் எடுத்துச் சொல்லிய வீட்டுக்கு விளக்காக நாட்டுக்குத் தொண்டர்களாக வாழுங்கள்! வாழுங்கள்! வாழுங்கள்! என்று சொல்லி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications