சென்னை விமான நிலைய பாலத்திலிருந்து விழுந்து ஐடி ஊழியர் பலி
Recommended Video

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாலத்தில் இருந்து விழுந்து ஐடி ஊழியர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏர்போர்ட் 4வது நுழைவு வாயில் அருகே உள்ள பாலத்தில் இன்று காலை சுமார் 6.30 மணிக்கு இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.
அந்த இளைஞரை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே இறந்துவிட்டார்.

ஆந்திராவை சேர்ந்தவர்
தலையில் பலத்த அடி பட்டு மண்டை ஓடு உடைபட்டதால் அந்த இளைஞர் பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஜனார்த்தன ராவ் என்பவரின் மகன் சைத்தன்யா (32) என்பது தெரியவந்தது.

பெங்களூர் ஐடி ஊழியர்
இவரது அடையாள அட்டையை வைத்து, பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் ஏன் சென்னை ஏர்போர்ட் வந்தார் என்பது தெரியவில்லை. அவரது பாக்கெட்டில் டிக்கெட் இல்லை. ஒருவேளை செல்போனில் இருந்திருக்கலாம். ஆனால் அவரின் ஐபோன் டேமேஜ் ஆகிவிட்டது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் செல்ஃபி எடுக்க முயன்று தவறி விழுந்திருக்க வாய்ப்புள்ளது தெரியவந்ததாக போலீசார் கூறுகிறார்கள். தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறுகிறார்கள். இப்போதைக்கு, எதிர்பாராத சாவு என்ற பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர் சர்ச்சை
சென்னை விமான நிலைய மேற்கூரை விழுவது தொடர்கதையாக இருந்த நிலையில், இப்போது வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளது, சென்னை விமான நிலையத்தில் மற்றொரு பரபரப்பாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications