100க்கு போன் போட்டுவிட்டு.. உயிர் போகும் வரை உதைத்த இளைஞர்கள்.. வேளாங்கண்ணி யாத்திரையில் பகீர்
மயிடுலாதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் செல்போனை திருட முயன்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடலூரைச் சேர்ந்த 6 பேரை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி உள்ளது. இன்று முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடைபெறும்.

நாளை மறுநாள் மாலை சிலுவை பாதையும், செப்டம்பர் 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சமய வேறுபாடுஇன்றி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். பல ஆயிரம் பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை பார்க்க பாதயாத்திரையும் வருகிறார்கள்.
தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தினமும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்கள். அந்த வகையில் திருவிழாவில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் பாதயாத்திரையாக மயிலாடுதுறை வழியாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாதயாத்திரை சென்ற இளைஞர்கள், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோவில் அருகே கருவிழந்தநாதபுரம் மெயின்ரோடு அருகே உள்ள ஒரு திடலில் அசதி காரணமாக தூங்கி உள்ளனர்.
இளைஞர்கள் 10 பேரும் அசந்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவர்களின் பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன், பவர் பேங்க் உள்ளிட்டவற்றை திருட முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தூங்கி கொண்டிருந்தவர்களில் ஒருவர் விழித்துக் கொள்ளவே, மர்ம நபரை கண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு மற்ற பக்தர்களும் எழவே.. செல்போனை திருடிக் கொண்டு அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார்.
பின்னர் அந்த நபரை விரட்டி பிடித்த வேளாங்கண்ணி பக்தர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, நடந்த சம்பவத்தை காவல்துறை அவசர எண்ணான 100க்கு அழைத்து தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக இணைப்பை துண்டித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதற்குள்ளாகவே அவர்கள் அங்கிருந்து வேகவேகமாக சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருடிவிட்டு அடி வாங்கிய நபரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இளங்கோவன் என்பதும், கவுசல்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.
காவல்துறை அவசர எண்ணை போலீசார் திரும்ப அழைத்த போது, அந்த நபர் தனது குழுவினருடன் காரைக்கால் மாவட்ட எல்லையில் ஓய்வெடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி அந்த இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்னிவளவன்(19), தினேஷ்கரன்(20), வெற்றிவேல்(19), சுகுமார்(19), பாலசுப்பிரமணியன்(25), முத்துகமலேஷ்(20) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் , 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications