அரசு புறம்போக்கு 31 ஏக்கர் நிலம்.. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக கேஸில் 4 வாரம் கெடு தந்த ஹைகோர்ட்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை, காவல்துறை உதவியுடன் அடுத்த 4 வாரங்களுக்குள் மீட்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது... சாஸ்த்ரா கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவானது பலரின் கவனம் பெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை
இந்த கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில், மொத்தம் 31.37 ஏக்கர் அளவிலான அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசு நிலத்தை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் நீண்ட காலமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக தமிழக அரசு குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறது..
இதனிடையே, தாங்கள் பயன்படுத்தி வரும் 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சட்டப்படி தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தது. அத்துடன், அந்த நிலத்திற்கு உரிய வித்தியாசத் தொகையும், தற்போது நிலவும் சந்தை விலையையும் செலுத்த தயாராக இருப்பதாகவும் அரசுக்கு தெரிவித்தது.
அரசு புறம்போக்கு நிலம்
ஆனால், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தியுள்ள காரணத்தால், அந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. மேலும், அந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என தஞ்சாவூர் வட்டாட்சியர் சார்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 4 வாரங்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீர்நிலைகளில் பல்கலைக்கழகம்
இந்த வழக்கில், பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தின் ஒரு பகுதி நீர் நிலைகளில் அமைந்துள்ளதாகவும், எனவே மே 2022-ல் வெளியிடப்பட்ட அரசாணை இங்கு பொருந்தாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அந்த நிலம் உண்மையில் நீர்நிலையா என்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்த இடம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் இந்த வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
4 வாரங்களில் மீட்க உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கடந்த 35 ஆண்டுகளாக பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை காலி செய்ய தஞ்சை வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு தந்துள்ள இந்த தீர்ப்பானது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications