கும்பகோணம் ஆர்த்தி.. பாபநாசம் ரேவதி... மகள்களை கட்டிப்பிடித்தபடி ரயில் முன் நின்று .. பெரும் துயரம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ரயில் முன் பாய்ந்து தாய்-மகள்கள் உள்பட 5 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகே உத்தாணியில் ரயில்வே கேட் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் அருகில் குடமுருட்டி ஆற்றுப்பாலத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது 2 மகள்களை கட்டி அணைத்தப்படி ரயில் முன் பாய்ந்தார். இதில் 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைகுக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உருக்கமான தகவல்கள் கிடைத்தது. தஞ்சை கும்பகோணம் நால்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடைய மனைவி ஆர்த்தி (வயது 40) தனதுமகள்கள் ஆருத்ரா (11), சுபத்ரா (8) ஆகியோருடன் இறந்தது தெரியவந்தது. ஆர்த்தியின் கணவர் ராஜேஷ் கோவையில் பில்டிங் கட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆர்த்தி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆருத்ரா 6-ம் வகுப்பும், சுபத்ரா 4-ம் வகுப்பும் படித்து வந்திருக்கிறார்கள். நேற்று காலை தோழியின் வளைக்காப்பு விழாவுக்காக செல்வதாக கூறிய ஆர்த்தி, தனது மகள்கள் ஆருத்ரா, சுபத்ராவுடன் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்திற்கு தனது ஸ்கூட்டியில் சென்றிருக்கிறார்
இந்த நிலையில் உத்தாணி ரயில்வே கேட்டுக்கு சென்ற ஆர்த்தி தான் வந்த ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்தி விட்டு மகள்களுடன் தண்டவாளத்துக்கு நடந்து சென்றள்ளார். அங்கு ரயில் கிட்டே வந்த உடன், 3 பேரும் கட்டி அணைத்தபடி செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் ஆர்த்தி மற்றும் அவரது மகள்கள் ஆருத்ரா, சுபத்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்..
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மனைவி ரேவதி (வயது 50). இவருடைய மகள் மகேஸ்வரி (30). மகேஸ்வரிக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திருவிடைமருதூர்ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ரேவதியும், அவருடைய மகள் மகேஸ்வரியும் இறந்து போனார்கள்.
இதை அறிந்த ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்பகோணம் பகுதியில் ஒரே நாளில் 2 வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த தாய், மகள்கள் உள்பட 5 பேர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications