“அடிச்சு கொல்லுங்கடா”.. கும்பகோணத்தில் கஞ்சா போதையில் அரசு பஸ் டிரைவரை புரட்டி எடுத்த கும்பல் கைது!
தஞ்சாவூர்: அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கஞ்சா போதையில் இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாலக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் ஓட்டி வந்தார். நடத்துநர் செந்தில் குமார் பேருந்தில் இருந்தார்.

அந்த அரசுப் பேருந்து பாலக்கரை அருகே வந்தபோது, சாலையின் நடுவே இளைஞர்கள் சிலர் பைக்கில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஹாரன் அடித்துள்ளார். ஆனால், இளைஞர்கள் தொடர்ந்து சாலையிலேயே நின்றிருந்த நிலையில், பேருந்தை ஒதுக்கிச் செல்ல முயன்றபோதும் அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்தனர். மேலும், ஓட்டுநர் ரமேஷை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தடுக்க முயன்ற நடத்துநர் செந்தில்குமார் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதனை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்ற போது அந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த வழியே சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர்.
இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் ரமேஷ் படுகாயமடைந்தார். நடத்துநர் செந்தில் குமார் மற்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த 4 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சுதர்சன், ஜனார்த்தனன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
தொடர்ந்து, போலீசார், டிரைவர் உள்ளிட்டோரை தாக்கிய இளைஞர்களை தேடி வந்த நிலையில், உதயகுமார் (25), கார்த்திகேயன் (21), மாரிமுத்து (18) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications