தஞ்சை தேர் விபத்து: கதறியழுத உறவுகள்... நேரில் ஆறுதல் வழங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர்: தேர் விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கியதுடன், விபத்து நேர்ந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

மின் விளக்குகளால் அலங்காரம்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் தொண்ட பல்லக்கு தேரில் அப்பர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த தேரை திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்றனர்.

பள்ளத்தில் இறங்கிய தேர்
தேரில் அலங்கார மின் விளக்குகள் ஒளிர்வதற்காக வேண்டி ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தேரை அப்பர் மடத்திற்கு கொண்டு செல்வதற்காக பக்தர்கள் சாலை வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தேரின் ராட்சத சக்கரம் இறங்கியது. அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது.

11 பேர் பலி
இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்
இந்த விபத்து செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து துயரமுற்றதாக கூறிய அவர், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சையளிக்கவும் ஆணையிட்டார்.

நேரில் சென்று ஆறுதல்
இந்த நிலையில், சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சரை பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். அவர்களை தேற்றிய மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அடங்கிய காசோலையை வழங்கினார்.
Recommended Video

களிமேட்டில் ஆய்வு
இதன் பின்னர் தேர் விபத்துக்குள்ளான களிமேடு கிராமத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து நேர்ந்த இடத்தில் ஆய்வு செய்தார். தீக்கிரையான தேரையும் அவர் பார்வையிட்டார். அவரிடம் நடந்தது குறித்தும் அடுத்தக்கட்ட விசாரணை குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். இந்த ஆய்வின்போது முதலமைச்சருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications