செருப்பால் அடித்த திமுக பிரமுகர்.. கலங்கிய பழங்குடி பெண்கள்.. உடனே ஆக்சன் எடுத்த கலெக்டர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெரிய சாக்கில், பாட்டில், பிளாஸ்டிக் போன்ற வேஸ்ட் பொருள்களைச் சேகரித்த பழங்குடியினப் பெண்களை, செருப்பால் அடித்து விரட்டிய திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள துறவிக்காடு எம்.ஜி.ஆர் நகரில் பழங்குடியினப் பெண்கள் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் இரண்டு பெண்கள், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் தெருக்களில் கிடந்த வேஸ்ட் பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில் உள்ளிட்டவற்றைச் சேகரித்தனர்.

அப்போது குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த பேராவூரணி திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபா லட்சுமி என்பவரின் கணவர் சுவாமிநாதன் ( 52 வயது) சம்பவ இடத்திற்கு வந்தார்.
பழங்குடியினப் பெண்கள் பெரிய சாக்கில் வேஸ்ட் பொருள்களைச் சேகரித்து வைத்திருப்பதை பார்த்த சுவாமிநாதன். தன்னுடைய இடத்திலிருந்து பொருள்களைத் திருடிச் செல்வதாக நினைத்து, அந்த சாக்கைப் பிடுங்கினார். அதிலிருந்த பொருள்களைக் கீழே கொட்டினார். இதையடுத்து, ஓடுங்க, ஓடுங்க' எனச் சொல்லிக்கொண்டே காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி பழங்குடியினப் பெண் முதுகில் சுவாமிநாதன் செருப்பால் ஓங்கி அடித்தார்.
அதில் ஒரு பெண் இடுப்பில் குழந்தை வைத்திருந்தார். 'குப்பையைத்தான் எடுத்தோம் அதுக்கு முதுகிலேயே செருப்பால் அடிக்கிறார்' என அழுதுகொண்டே இரண்டு பெண்களும் ஓடியிருக்கிறார்கள் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சுவாமிநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர், திமுக பிரமுகர் சுவாமிநாதனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே நடந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications