கள்ளக்காதல் செய்த கணவன்.. குழவிக் கல்லை போட்டு சோலியை முடித்த மனைவி.. தஞ்சாவூரில் பகீர் சம்பவம்
தஞ்சாவூர்: திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் தலையில் குழவிக் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், மாதாளம்பேட்டை தெரு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவரது மனைவி கலைவாணி (38). இவர்கள் இருவருக்கும் திருமணமாக 15 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அன்பரசன் திருபுவனத்தில் உள்ள பேக்கரியிலும், சில நேரங்களில் கிடைக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அன்பரசன் திருபுவனத்தில் பேக்கரியில் வேலை பார்த்தபோது அப்பகுதியில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அன்பரசனின் மனைவி கலைவாணி அடிக்கடி இது தொடர்பாக கணவன் அன்பரசனுடன் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று இரவு இது தொடர்பாக கணவன் மனைவி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த மனைவி கலைவாணி அருகில் இருந்த குழவி கல்லை எடுத்து அன்பரசனின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அன்பரசன் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் கலைவாணியை கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட குழவிக் கல்லையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், உயிரிழந்த அன்பரசனின் உடலை உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தால் மனைவியே குழவிக் கல்லை போட்டு படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications