தவெக கூட்டத்தில் கலந்துகொள்ள போலி QR Code அட்டையுடன் வந்த விஜய் ரசிகர் - எச்சரித்து அனுப்பிய போலீஸ்!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள போலி QR Code அட்டையுடன் வந்த நபரை கண்டறிந்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். QR Code அட்டையில் மாவட்டச் செயலாளரின் சீல் இல்லாததால் போலி என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்கிறார். கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு சுமார் 5,000 நிர்வாகிகளுக்கு மட்டும் பாஸ் கொடுத்து, பங்கேற்க வைத்து மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் தஞ்சை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் முன்கூட்டியே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. திடலுக்குள் நுழைவதற்கு க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என தவெக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி செல்கிறார்.
இந்நிலையில், தஞ்சை செங்கிப்பட்டியில், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் தவெகவினர் குவிந்துள்ளனர். க்யூ ஆர் கோடு பாஸ் உடன் வந்தவர்களை சரிபார்த்து போலீசார், தவெக பாதுகாப்பு குழுவினர் உள்ளே அனுப்பி வருகின்றனர். மேலும் பலர் க்யூ ஆர் கோடு பாஸ் இல்லாமல் அப்பகுதியில் திரண்டுள்ளனர்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள போலி QR Code அட்டையுடன் வந்த நபரை கண்டறிந்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். QR Code அட்டையில் மாவட்டச் செயலாளரின் சீல் இல்லாததால் போலி என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications