நுங்கும், நுரையுமாக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு! தஞ்சாவூர் உட்பட டெல்டா விவசாயிகள் குஷி
தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி டெல்டா விவசாயிகள், அனைவருமே மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்டும் அம்மாநிலம் தருவதாக இல்லை.. இது தொடர்பான விவகாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. எனினும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, தண்ணீர் பெருகி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையை நிரம்ப வைக்கிறது.
நீர் திறப்பு: அந்தவகையில், மேட்டூர் அணையில் குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்ட நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காகவும் நீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படியே, காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணை நீர் திறக்க, கடந்த ஞாயிறன்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படியே, அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. ஏற்கனவே தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இப்போது 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டதுடன், தங்கள் மாவட்ட மக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
காவிரி பாசன பகுதிகள்: இந்நிலையில், இந்த தண்ணீர் அகண்ட காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை வந்தது. நுங்கும், நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரில் விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
அதேபோல, மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணைக்கு இன்று அதாவது புதன்கிழமை அதிகாலை வந்து சேரும் என்றும், பிறகு கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை 9.15 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
பூரிப்பு: அதன்படியே இன்று விடிகாலை கல்லணைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்துள்ளது.. இதையடுத்து, தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியும் இன்னும் சற்று நேரத்தில் நடக்க போகிறது.. இந்த நிகழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்ட அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொள்ள போகிறார்கள்..
கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் செய்து வரும்நிலையில், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு: அதன்படியே, கரூர், முக்கொம்பு பகுதிகளை கடந்து, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு இன்று அதிகாலை வந்தது. இதையடுத்து கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னதாக கருப்பணச்சாமி, ஆஞ்நேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு மேளதாளத்துடன் அமைச்சர்கள் நேரு, மகேஷ், டி.ஆர்.பி., ராஜா, மெய்யநாதன், எம்எல்ஏக்கள், கலெக்டர்கள், அதிகாரிகள், விவசாயிகள் ஊர்வலமாக சென்று, முதலில், காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டனர். இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டி பூக்களையும், நவதானியங்களையும் ஆற்றில் விட்டனர்.
கல்லணை: இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "முதல் கட்டமாக காவிரியில் 1500 கன அடி,வெண்ணாறு ஆயிரம் கன அடி, கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்படும்.. இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications