தஞ்சையில் தோண்ட தோண்ட வந்த பாம்பு குட்டிகள்.. மீண்டும் ஒரே வீட்டில் 14 கண்ணாடி விரியன் பாம்புகள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி, பத்தாவது தெருவில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டின் சுற்றுப்புற சுவரில் பாம்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிமெண்ட் தரையின் அடிப்பகுதியில் காணப்பட்ட விரிசலை பயன்படுத்தி 14 கண்ணாடி விரியன் ( Glass viper ) பாம்புகளை மீட்டனர். பாம்பு குட்டிகள் சில நாட்களுக்கு முன்பு பிறந்தவை ஆகும். அனைத்துமே கடுமையான விஷம் கொண்டவை ஆகும்.
தமிழகத்தில் நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கட்டு விரியன், கண்ணாடி விரியன், இந்த நான்கு பாம்புகள் அதிகமாக அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் ஆகும். இதில் நாகப்பாம்பை பொறுத்தவரை உடலின் பின்புறத்தில் பெரிய, வட்ட வடிவமான அல்லது "கண்ணாடி" போன்ற உருவத்தை காண முடியும். இது கோபப்படும்போது படம் எடுக்கும்.

இது பெரும்பாலும் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். நாகப்பாம்பு கடித்தால விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic) தன்மை கொண்டது. இது நரம்புகளைப் பாதிப்பதால் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு நின்றுபோகும். நாகப்பாம்பு கடித்தால். கடிபட்ட இடத்தில் வலி, எரிச்சல், மயக்கம், கண் இமைகள் மூடிக்கொள்ளுதல், பேசுவதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சுருட்டை பாம்பு ஆபத்தானது
அதேபோல் இருளில் அதிகம் பேரை கடிக்ககூடிய பாம்பு சுருட்டை விரியன். சிறிய, அடர்த்தியான உடல் கொண்ட சுருட்டை பாம்பின் உடலில் புள்ளிகளும், வட்ட வடிவ அமைப்புகளும் இருக்கும். இதன் விஷம் இரத்த மண்டலத்தைத் தாக்கும் (Haemotoxic) தன்மை கொண்டது. இது இரத்த சிவப்பணுக்களை அழிப்பதுடன், இரத்த உறைதலையும் தடுத்துவிடும். கடிபட்ட இடத்தில் கடும் வலி, வீக்கம், ரத்தம் கசிதல், சிறுநீர் மற்றும் வாந்தியில் ரத்தம் கலந்து வருதல், இரத்தம் உறைவதில் சிரமம் ஏற்படும்.
நாகப்பாம்பை விட கட்டுவிரியன் அதிக விஷம்
அதேபோல் இரவில் அதிக அளவில் சுற்றும் பாம்பு கட்டுவிரியன். கருப்பு நிற உடல் மீது வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பட்டைகள் இருக்கும். இது பொதுவாக இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும். பகலில் இது அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic) வகையைச் சேர்ந்தது. இது நாகப்பாம்பின் விஷத்தை விடப் பல மடங்கு வீரியம் கொண்டதாகும். கடித்த இடம் மிகவும் சிறியதாக இருக்கும், சில சமயங்களில் வலி கூட இருக்காது. ஆனால், சில மணி நேரங்களில் வயிறு வலி, குமட்டல், வாந்தி, உடல் தசைகளில் தளர்வு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு ஆளையே காலி செய்துவிடும்.
கண்ணாடி விரியன் ஏன் ஆபத்தானது
அடுத்ததாக அதிகம் உள்ள பாம்பு கண்ணாடி விரியன். பெரிய, தடிமனான உடல் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பின், உடலின் மீது இருண்ட பழுப்பு நிறத்தில் நீள்வட்டப் புள்ளிகள் இருக்கும். இந்தப் புள்ளிகள் பார்ப்பதற்கு ஒரு சங்கிலி போல் தெரியும். இதன் விஷம் இரத்த மண்டலத்தைத் தாக்கும் (Haemotoxic) தன்மை உள்ளது. சுருட்டை விரியன் பாம்பின் விஷத்தை விட மிகவும் வீரியம் மிக்கதாகும். கடும் வலி, பெரிய வீக்கம், ரத்தம் கசிதல், திடீர் ரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரகப் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும்.
நான்கு பாம்புகள்
நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கட்டு விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நான்கு பாம்புகளுமே மோசமான விஷத்தன்மை கொண்டவை என்றாலும், நாகப்பாம்பை விட கட்டு விரியன் 10 முதல் 15 மடங்கு அதிக வீரியம் ஆகும். அதேபோல் கண்ணாடி விரியனும், சுருட்டையைவிட அதிக விஷத்தன்மை கொண்டவை ஆகும். கண்ணாடி விரியன் பாம்பு சமீபகாலமாக அதிக அளவில் தஞ்சை மாவட்டத்தில் பிடிப்பட்டுள்ளது.
கண்ணாடி விரியன் பாம்புகள்
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கடந்த ஒரு வாரம் முனபு ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளது. இதையடுத்து தஞ்சையில் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது கண்ணாடிவிரியன். அந்த கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை ஈன்றது. அதனை அவர்கள் வனப்பகுதியில் விட்டனர்.
தஞ்சையில் மீண்டும் பாம்பு
இதேபோல் தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி, பத்தாவது தெருவில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டின் சுற்றுப்புற சுவரில் பாம்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை இரவு EWET அமைப்பிற்கு சுமார் ஏழு மணி முப்பது நிமிடங்களில் தகவல் வழங்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் EWET அமைப்பின் மீட்பு குழுவினர் சதீஷ்குமார் ராஜேந்திரன், அன்பொளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு நிலைமைக்கு ஆய்வு மேற்கொண்டனர்.
சிமெண்ட் தரையின் அடியில் பாம்புகள்
சிமெண்ட் தரையின் அடிப்பகுதியில் காணப்பட்ட விரிசலை பாதுகாப்பாக உடைத்து ஆராய்ந்தபோது, கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு இனத்தினைச் சேர்ந்த 14 குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாம்பு குட்டிகள் சில நாட்களுக்கு முன்பு பிறந்தவை என்பது தெரியவந்தது. அவை அனைத்தும் ஆபத்தின்றி மீட்கப்பட்டன. தொடர்ந்து, இப்பாம்புகள் அனைத்தும் வனத்துறை மூலமாக பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications