கும்பகோணம் மாவட்ட கனவு நிறைவேறுகிறதா? தஞ்சை வரை இனி அலைய வேண்டாம்.. டெல்டா முழுக்க இதே பேச்சு
தஞ்சாவூர்: 30 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் கும்பகோணம் தனி மாவட்டக் கோரிக்கை, இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள நம்பிக்கை வார்த்தையானது, டெல்டா அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை பொறுத்தவரை தினமும் வெளிநாட்டினர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விவசாயம், நெசவு மற்றும் பல சிறு, குறு தொழில்கள் அதிகம் நடைபெறும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து 30 ஆண்டு காலமாக கோரிக்கை எழுப்பப்படுகிறது.

தனி மாவட்டம் - கும்பகோணம்
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டிலிருந்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் பல விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பேன் என்று தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட இந்த மாவட்டக் கோரிக்கையை, திமுக அரசு கடைசிவரை நிறைவேற்றாமல் போனது, இப்பகுதி மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.
இத்தனைக்கும் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் என மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தும், மாவட்டம் அறிவிக்கப்படாதது நீண்ட காலமாகவே ஏமாற்றத்தையே தந்து வந்தது. போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடங்கி வணிகர்கள், பொதுமக்கள் வரை கடந்த 7 ஆண்டுகளாகப் பல கட்டப் போராட்டங்களைச் செய்தும் ஒரு பலனும் இல்லை..
ஷாஜகான் தந்த நம்பிக்கை
இந்நிலையில்,அமைச்சர் ஷாஜகான் பதவியேற்றதுமே கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "பல ஆண்டுகளாகப் போராடி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் விவகாரத்தில், அவர்களுடன் நேரில் அமர்ந்து பேசித் தீர்வு காண்பேன், அரியலூர் - தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம், வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தப் புதிய சர்வே எடுக்கப்படும்" என்றெல்லாம் பலவிதமான அறிவிப்புகளை ஷாஜகான் தந்துள்ளார்..
தஞ்சை மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியது, மக்கள் தொகையும் அதிகம், எனவே கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் மேற்கண்ட அறிவிப்புகள் அனைத்தும் வருவாய் நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஹைலைட்டாக பேசப்படுவது, கும்பகோணம் தனி மாவட்டமாக மாற்றப்படும், முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசித்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளதுதான்.
கும்பகோணத்துக்கு கிடைக்கும் பலன்கள்
இந்த அறிவிப்பு மட்டும் நிறைவேற்றப்பட்டால், மாவட்டதில் நிர்வாகத் திறன் கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்தும் உள்ளூர் மட்டத்திற்கே வரும்போது, பொதுமக்கள் தஞ்சை வரை அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
ஆன்மீகத் தலமான கும்பகோணத்தில் சுற்றுலா வசதிகள் மேம்படும், உள்ளூர் வணிகம் சூடுபிடிக்கும். குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் பெரும் முதலீடுகள் வந்து சேர்ந்தால், தஞ்சைக்குப் பக்கத்தில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டிருக்கும் இந்தப் பகுதி, பொருளாதார ரீதியாகத் தன்னாட்சி பெறும்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, வெறும் அறிக்கையோடு முடிந்துவிடுமா அல்லது இந்த முறையாவது கும்பகோணம் மண்ணுக்கு விடியல் கிடைக்குமா என்பது, இனி வரும் நாட்களில்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications